தமது கல்வித் தகைமை என்ன என்பது தொடர்பில் ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபையில் இன்று செவ்வாய்க்கிழமை எழுப்பிய கேள்விகளுக்கு நாளை புதன்கிழமை முழுமையான ஆணவங்களை முன்வைத்து பதில் அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதிலளித்தார்.
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநதி பட்டம் தொடர்பில் எழுந்த சர்ச்சை காரணமாக அவர் தமது பதவியை துறந்திருந்ததுடன், இன்று புதிய சபாநாயகராக ஜெகத் விக்ரமரத்ன தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஆளுங்கட்சியின் எம்.பிகள் சிலரின் கல்வித் தகமை தொடர்பில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் இன்றைய அமர்வில் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கல்வித் தகமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் நிலவுவதால் லண்டனில் அவர் பெற்ற கல்வித் தகமைகளை வெளிப்படுத்தினால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளியை வைக்க முடியும் என ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ உட்பட ஆளுங்கட்சியின் சில உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்த சஜித் பிரேமதாச, நாளை (புதன்கிழமை) சகல ஆவணங்களுடனும் தமது கல்வித் தகமை தொடர்பிலான தகவல்களை சபையில் முன்வைக்கதாக கூறினார்.