முள்ளிவாய்க்காலில் நினைவாலயம் அமைக்க நாடாளுமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது

0
13
Article Top Ad

தமிழ் மக்களுக்கு எதிரான வரலாற்றின் மிகப்பெரிய இனப்படுகொலையில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் மண்ணில் அங்கீகரிக்கப்பட்ட நினைவுத் தூபியை நிர்மாணிப்பதற்கு தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் நாடாளுமன்றத்தில் அனுமதி கோரியுள்ளார்.

இவ்வாறான அங்கீகரிக்கப்பட்ட நினைவுச்சின்னம் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களால் கோரப்படுவதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று முன்தினம் (டிசம்பர் 17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“உறவுகளை இழந்து தற்போது வாழ்ந்து வரும் மக்கள் தமது உறவுகளை நினைவு கூறுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு நினைவிடம் தேவை என்பதை அங்குள்ள மக்கள் ஆதங்கத்துடன் கூறி வருகின்றனர். உயிரிழந்தவர்களை நினைவுகூறும் விதத்தில் உலகின் மூத்த குடிகளில் ஒன்றான தமிழ் இனம் உயர் நாகரீக பண்பாடுகளை கொண்டுள்ளது. எமது இன வரலாற்றில் மிக அதிகமான மக்கள் உயிரிழந்த எம் உறவுகளை நினைவுகூற ஒரு நினைவாலயம் ஒன்றை அமைப்பது அவசியமான ஒரு விடயம்.”

இவ்வாறான நினைவுச் சின்னம் அமைப்பதில் உயிரிழந்தவர்களின் பெயர்களை பதிவு செய்வதன் முக்கியத்துவம் குறித்து துரைராசா ரவிகரன் இதன்போது தெளிவுபடுத்தினார்.

“சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களுக்கென முல்லைத்தீவில் மாத்திரமல்ல பல இடங்களில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு உயிரிழந்த ஒவ்வொருவரினதும் பெயர்களும் குறிக்கப்பட்டுள்ளது. இது காலாகாலத்திற்கு உயிரிழந்தவர்களையும் சந்ததியினரையும் நினைவுகூற வழியேற்படுகின்றது. அதேபோன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவாக கட்டப்படும் நினைவாலயத்தில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்படுவது தத்ததது உறவுகளை காலாகாலத்திற்கும் அவர்களின் சந்ததிகள் நினைவுகூற வசதியாக இருக்கும். எம் இனத்தின் பண்பாட்டையும் பிரதிபலிப்பதாக அது அமையும்.”

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில்  ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் திகதி, ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடி மலர்களைத் தூவி, தீபங்கள் ஏற்றி உயிரிழந்த உறவுகளை நினைவுகூறுகின்றனர்.

அந்த நிலத்தில் புதிய நினைவுச் சின்னம் ஒன்றை அமைப்பதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியை வழங்குமாறு கோரிய நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறந்தவர்களை நினைவு கூரும் வகையில் நினைவுத்தூபியை அமைக்க அனுமதிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

“தேசிய பேரவலத்தின் சாட்சியாக நினைவாலயம் முள்ளிவாய்க்காலில் மே 18 நினைவேந்தல் இடம்பெறும் இடத்தில் அமைக்கப்பட வேண்டும். இறந்தவர்களை நாம் அடக்கம் செய்யும்போது நாம் கல்றை அமைக்கின்றோம். அந்த கல்லறைகளில் சம்பந்தப்பட்ட உறவுகள் நினைவுதினங்களில் தமது கவலையை உள்ளத்தில் இருந்து வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக ஒரு நினைவு ஆலயம் அமைப்பதற்கு எமது மக்களுக்கு அனுமதி தாருங்கள்.

இறந்தவர்களுக்கு மரியாதை கொடுப்பது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருப்பது போல், இறந்தவர்களுக்கு மரியாதை செய்வதும் ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை உரிமையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here