ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய பயணத்தில் எட்கா உடன்படிக்கை தொடர்பில் எவ்வித இறுதி இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை. இதுதொடர்பான பேச்சுகளை முன்னோக்கி கொண்டுசெல்லவே இருதரப்பினரும் இணங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய பயணம் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியதாவது, அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
அரச தரப்பினருடன் சந்திப்புகளை நடத்தினோம்
”ஜனாதிபதியின் இந்திய பயணம் இலங்கையர்களுக்கு மிகப்பெரிய வெற்றியை அளித்துள்ள பயணமாக மாறியுள்ளது. இலங்கையின் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்க கூடிய உயரிய கௌரவத்தை இந்தியாவின் அரச அதிகாரிகள் எமக்கு வழங்கினர். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இந்த கௌரவம் கிடைத்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் முதல் நாளிலேயே ஜனாதிபதி சந்திப்புகளை நடத்தியிரந்தார். இந்த சந்திப்புகள் எமது நாட்டின் பொருளாதாரம், கலாசாரம் மற்றும் ஏனைய பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்தன.
இந்தியாவுடனான எமது உறவை மற்றுமொரு அத்தியாயத்தை நோக்கி கொண்டுசென்ற பயணமாக இது இருந்தது. இரண்டாவது நாளில் அரச வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், இந்திய பிரதமர், ஜனாதிபதி மற்றும் அரச தரப்பினருடன் சந்திப்புகளை நடத்தினோம்.
இருதரப்புகளுக்கும் இடையில் உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன. ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் இணைந்து கூட்டு அறிவிப்புகளை வெளியிட்டதுடன், இருநாடுகளும் இணைந்து கூட்டறிக்கைகளையும் வெளியிட்டோம். அதேபோன்று இந்திய சுகாதார அமைச்சர் மற்றும் இந்திய வர்த்தகர்களுடனும் சந்திப்புகளை ஜனாதிபதி நடத்தினார். மூன்றாம் நாள் மகாபோதியில் வழிபாடுகளில் ஈடுபட்டோம். இதற்கு அப்பால் நான் வெளிவிவகார அமைச்சராக சில நிகழ்வுகளில் கலந்துகொண்டேன்.
இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை
முதலாவது உடன்படிக்கையில் 1500 அரச ஊழியர்களுக்கு இரண்டு வார பயிற்சியை வழங்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டது. இரண்டாவது உடன்படிக்கையில் இரண்டு நாடுகளில் விதிக்கப்படும் வரிக்கு பதிலாக ஒரு நாட்டில் வரியை செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த இணக்கப்பாடு எட்டப்பட்டது. வர்த்தகர் ஒருவர் ஒரு நாட்டில்தான் இதன்ணமூலம் எதிர்காலத்தில் வரியை செலுத்த வேண்டும். இது மிகப்பெரிய நன்மையாகும்.
இவை மாத்திரமே இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட விடயமாகும். ஏனைய விடயங்கள் தொடர்பில் பேச்சுகள் நடத்தப்பட்டன. என்றாலும் இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை.
வடக்கில் மீனவர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. ரோலர் படகுகள் மூலம் மீன்பிடியில் ஈடுபடுவதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதால் ஏற்படும் கைதுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படாத வண்ணம் எமது தீர்மானம்
இருதரப்பினரும் ஆழமாக இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதுடன். விரைவாக நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள இருதரப்பினரும் இணங்கியுள்ளோம்.
இந்தியாவால் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல இந்தியாவின் உதவி தொடர்ந்து வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
மாஹவ மற்றும் அநுரதாரபுரம் இடையில் புனரமைக்கப்படும் புகையிரத பாதையை முழுமையாக மானிய அடிப்படையில் செய்துக்கொடுக்க இந்தியா இணங்கியுள்ளது.
எமக்கு சொந்தமான சர்வதேச கடல் எல்லை தொடர்பில் கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பில் ஐ.நாவில் இலங்கை கோரிக்கையொன்று முன்வைத்துள்ளது. இந்தியாவுடன் கலந்துரையாடி இருதரப்பும் இணக்கப்பாடுகள் எட்டப்பட வேண்டுமென எமது கோரிக்கையை முன்வைத்தோம்.
எமது நாட்டுக்கு சொந்தமான நிலப்பரப்பின் ஊடாக இந்தியாவுக்கும் ஆசிய பிராந்தியத்துக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படாத வண்ணம் எமது தீர்மானம் அமையும் என்ற உறுதிமொழியை வழங்கினோம்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த தருணத்தில் 4 பில்லியன் அமெரிக்க டொலர் உதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழ இந்தியா உதவியளித்தது. அதற்கு எமது நன்றியை தெரிவித்தோம். அதேபான்று சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு வழங்கிய உதவிகளுக்கும் நன்றி தெரிவித்தோம்.
எரிசக்தி தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையில் கலந்துரையாடல்
சிலர் இந்த பயணத்தில் பல்வேறு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக செய்திகளை பரப்ப முற்பட்டனர். பலர் தமது அரசியல் நோக்கங்களுக்கு பல காரணிகளை கூறினாலும் இதற்கு அப்பாலான எந்தவொரு உடன்படிக்கையும் செய்துக்கொள்ளப்படவில்லை.
தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலும் அவற்றை முன்னோக்கி கொண்டுசெல்லும் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினோம்.
எரிசக்தி தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நீண்டகாலம் உள்ளது. சம்பூர் சூரியஒளி மின்சார உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த இணக்கப்பாடு எட்டப்பட்டது. இது ஏற்கனவே செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையாகும்.
காற்றாளை மின் உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. காற்றாளை மின்சாரத்தை சரியாக செய்தால் நாம் எமது நாட்டுக்கு மேலதிகமாக உற்பத்தியை செய்ய முடியும். அதனை இந்தியாவின் ஊடாகதான் கொண்டுசெல்ல முடியும். அதனை கேபிள் முறையின் ஊடாகதான் கொண்டுசெல்ல முடியும். இது நாட்டை காட்டிகொடுக்கும் செயல்பாடு அல்ல. இது எமது பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டுசெல்லும் திட்டமாகும்.
எட்கா உடன்படிக்கை
இருநாடுகளுக்கும் இடையில் எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டம் தொடர்பில் பேச்சுகள் நடத்தப்பட்டது. ஐக்கிய அரபு இராச்சியத்துடன், இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் பேச்சுகள் நடத்தப்பட்டது. இது தொடர்பில் எவ்வித இறுதி இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை. பேச்சுகள் மாத்திரமே நடத்தப்பட்டுள்ளன.
திருகோணமலையில் 15 எண்ணெய் குதங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. 61 குதங்கள் இன்னமும் உள்ளன. அதனை கூட்டாக எவ்வாறு பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.
இருநாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட இலங்கை – இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மறுசீரமைக்க உத்தேசித்துள்ளோம். தற்போது சந்தையும் உலக வர்த்தகமும் விரிவடைந்துள்ளது. அதனால் அதில் சில மறுசீரமைப்புகளை செய்வது அவசியமாகும்.
எட்கா உடன்படிக்கை தொடர்பில் நீண்டகாலமாக பேச்சுகள் உள்ளன. இந்தப் பேச்சுகளை முன்னோக்கி கொண்டுசெல்லவே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. எட்காவை கைச்சாத்திட்டுவிட்டதாக சில அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர்.
எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு உடன்படிக்கையிலும் நாம் கைச்சாத்திட மாட்டோம். இருநாடுகளுக்கும் சாதகமான உடன்படிக்கைகளையே நாம் முன்மொழிகிறோம். எட்கா உடன்படிக்கையில் சில தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் உள்ளன. அவை தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்படுகிறது. எட்கா தொடர்பில் எந்தவொரு இறுதி இணக்கப்பாடும் இல்லை. அடுத்தகட்ட பேச்சுகள் குறித்தும் இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை.
எமது நாட்டின் பால் உற்பத்திக்கு இந்தியா பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை பெற்றுக்கொள்ள இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. இருநாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக செய்திகளை பரப்பியுள்ளனர். இருநாடுகளுக்கும் இடையிலான சமூக பாதுகாப்பு தொடர்பில் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடவே பேச்சுகள் நடத்தப்பட்டன. இரு நாடுகளிலும் இருநாட்டு பிரஜைகளும் பணிப்புரிக்கின்றனர். இவர்களது நன்மைகளை உள்ளடக்கும் வகையில் இந்த பேச்சுகள் நடைபெற்றன. இது பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல. இதற்கு அப்பால் சுற்றுலாத்துறை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.” என்றார்.