இலங்கையின் அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயத்தை ஜனாதிபதியின் இந்திய பயணம் தொடர்பிலான கூட்டறிக்கையில் ஏன் உள்ளடக்க வேண்டும்?. அதற்கான தேவைகள் எதுவும் எழவில்லை. அது எமது அரசியலமைப்பில் உள்ள ஒரு பகுதியாகும். அதன் பிரகாரம் அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய பயணம் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தபோது, 13ஆவது திருத்தச்சட்டம் மற்றும் மாகாண சபை தேர்தல் தொடர்பில் இந்தப் பயணத்தில் கலந்துரையாடப்பட்டதா, கடந்தகாலத்தில் ஜனாதிபதிகள் மேற்கொண்ட பயணம் தொடர்பான கூட்டறிக்கைகளில் 13ஆவது திருத்தம் தொடர்பில் தகவல் குறிப்பிடப்பட்டிருக்கும் இம்முறை ஏன் குறிப்பிடவில்லை. நீங்கள் அதனை குறிப்பிட வேண்டாம் என இந்தியாவிடம் கோரியதாக தெரிவிக்கிடுகிறேதே என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,
”நாம் எமது நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம்தான் செயல்படுகிறோம். எமது அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச்சட்டம் உள்ளது. இது தொடர்பில் புதிதாக பேசுவதற்கும் கூட்டு அறிக்கையில் உள்ளடக்குவதற்கும் அவசியமில்லை.
அடுத்தாண்டு ஆரம்பத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறும். அதற்குத் தேவையான பின்புலத்தை உருவாக்கி வருகிறோம். பழைய வேட்புமனுக்கள் நீக்கப்பட்டு புதிய வேட்புமனு கோரும் சட்ட ரீதியான திருத்தங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அதன் பின்னர் மாகாண சபை தேர்தல் நடைபெறும். எல்லை நிர்ணயம் தொடர்பில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பில் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன் பின்னர் தேர்தல் நடைபெறும். எனவே, 13ஆவது திருத்தச்சட்டத்தை மீண்டும் கூட்டறிக்கையில் உள்ளடக்க வேண்டிய அவசியமில்லை.” என்றார்.