இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் இருக்கும் சிறிய தீவான டீகோ கார்சியாவில் சிக்கியுள்ள இலங்கைத் தமிழர்களை பிரித்தானியா சட்டவிரோதமான தடுத்து வைத்திருந்தது என்று நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்துள்ளார்.
மாலத்தீவுக்கு தென் மேற்கேயும், ஆபிரிக்க கண்டத்தின் தென் பகுதிக்கு வட மேற்கேயும் உள்ள சாகோஸ் தீவுகள் கூட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய தீவு டீகோ கார்சியா. இந்தியப் பெருங்கடலில் இராணுவ கேந்திர ரீதியாக டீகோ கார்சியா மிகவும் முக்கியமான ஒரு இடமாகும்.
அங்கு பிரித்தானிய மற்றும் அமெரிக்க படைகள் நிலைகொண்டுள்ளன. அது முற்றாக இராணுவப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட ஒரு தீவாகும். அங்கு பொதுமக்கள் யாருக்கும் அனுமதியில்லை. தீவின் ஒரு பக்கம் அமெரிக்க கடற்படையும் மறுபக்கம் பிரித்தானிய படைகளும் உள்ளன.
இந்நிலையில் இலங்கையிலிருந்து கடந்த 2021ஆம் ஆண்டு தமது உயிரை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில் படகு ஒன்றில் பயணமான 60ற்கும் அதிகமான தமிழர்கள் கனடாவில் அகதி தஞ்சம் கோரும் நோக்கில் பயணமாகிய வேளையில், அந்த தீவிற்கு அருகில் செல்லும் போது, படகு பழுதானதால், அந்த தீவில் இறங்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
எனினும் டீகோ கார்சியா தீவு முற்றான இராணுவப் பிரதேசம் என்பதால், அங்கு இறங்கிய அனைத்து தமிழர்களும் தடுத்து வைக்கப்பட்டனர். மிகவும் இரகசியமான இராணுவ தளம் என்பதால், அங்கு தடுத்து வைக்கப்பட்ட தமிழர்கள் அவர்களுக்கென்று அமைக்கப்பட்ட தடுப்பு பகுதியிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
முள்வேலியிட்டு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு முகாமிலேயே அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தங்குமிடங்களில் எலிகளின் நடமாட்டமும் அதிகமாக இருந்ததால் சுகாதார நெருக்கடிகளும் தோன்றியிருந்தன.
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அங்கு தங்கியிருந்த பெரும்பாலானவர்கள் பிரிதானிய பெருநிலப் பரப்பிற்கு இந்த மாதத்தின் முற்பகுதியில் கொண்டுவரப்பட்டள்ளனர்.
எனினும் இந்த தீர்ப்பும் அவர்கள் பிரித்தானிய பெருநிலப் பரப்பிற்கு கொண்டுவரப்பட்ட சம்பவமும் தனித்துவமான ஒன்று, இதை எதிர்காலத்தில் ஒரு முன்னுதாரணமாக காட்ட முடியாது எனவும் பிரித்தானிய அரசு திட்டவட்டமாக தெளிவுபடுத்தியுள்ளது. அவர்கள் வழக்கு அசாதாரணமானது என்றும் ஒரே ஒரு முறை மாத்திரமே கவனத்தில் எடுக்கக் கூடியது என்றும் பிரித்தானிய அரசு தெரிவுபடுத்தியுள்ளது.
இவர்களின் வழக்கு மிகவும் சிக்கல் மிகுந்ததாக இருந்தது. இதை பிரித்தானிய நீதிமன்றம் விசாரிப்பதா அல்லது இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரித்தானிய பிரதேசங்களுக்கான நீதிமன்ற விசாரிப்பதா என்ற சர்ச்சை எழுந்தது. பின்னர் அந்த பெருங்கடல் பகுதியில் இருக்கும் பிரதேசங்களுக்கான உச்சநீதிமன்றம் வழக்கை விசாரித்தது.
பின்னர் தீர்ப்பளித்த நீதிபதி மார்கரெட் ஓபி அம்மையார், தஞ்சக் கோரிக்கையாளர்களை அந்த தீவில் பிரித்தானிய தடுத்து வைத்திருந்தது சட்டவிரோதமனது என தீர்ப்பளித்தார். தமிழர்கள் அங்கு தடுத்து வைக்கப்படவில்லை என்ற பிரித்தானிய அரசின் வாதத்தை நீதிபதி ஓபி நிராகரித்தார். அது எவ்விதத்திலும் “கருத்தில் எடுக்க முடியாதது” என அவர் கூறிவிட்டார்.
அவர்கள் சிறை வைக்கப்படவில்லை என பிரித்தானிய அரசு கூறியது. ஆனால் அவர்கள் தடுத்து வைக்கப்பட்ட இடத்தை சிறை என பெயரிட முடியாது என்றாலும், அவர்கள் முள்வேலியிடப்பட்ட இராணுவ கூடாரங்களில் அடைக்கப்பட்டிருந்ததது சிறை போன்ற சூழலே என நீதிபதி தீர்ப்பளித்தார்.
“உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலும், சட்டத்தின் பார்வையிலும், அவர்கள் டீகோ கார்சியாவை அடைந்த சமயத்திலிருந்து அங்கு தடுத்து வைக்கப்பட்டார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். 16 சிறுவர்கள் உட்பட 61 பேரும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டார்கள்” என தனது தீர்ப்பின் இறுதியில் நீதிபதி மார்கரெட் ஓபி கூறினார்.
இந்த தீர்ப்பை அடுத்து, அவர்கள் ‘நரகம் போன்ற சூழலில்” தங்க வைக்கப்பட்டதற்காக, அந்த தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு பெருந்தொகையான இழப்பீடு அளிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் போன்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.
அப்படி இழப்பீடு அளிக்கப்பட்டால் அது பல மில்லியன் பவுண்ட்ஸ்களுக்கு மேலாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகளை மேற்கொள்ள காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீர்ப்பு நீதிக்கான மிகப்பெரிய வெற்றி என சட்டத்தரணிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அந்த தீவில் தங்கியிருந்தவர்கள் கூட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்ற வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டார். தாங்கள் ஒவ்வொரு நாளும் அங்கு ”மெல்ல மெல்ல மரணத்தை எதிர்கொண்டோம்” என அளித்த சாட்சியத்தையும் நீதிபதி ஏற்றுக்கொண்டார். மேலும் சிறைவாசம் எவ்வளவு காலம் என தெரியாமலேயே தாங்கள் அங்கு தங்கவைக்கப்பட்டிருந்தோம் என்பதையும் நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
“மூன்று ஆண்டுகளாக நாங்கள் சிறைப்பறவை போன்று இருந்தோம். எமது வாழ்க்கை எமது கைகளில் இல்லை. உட்கார் என்றால் உட்கார வேண்டும், எழுந்திரு என்று சொன்னால் எழுந்திருக்க வேண்டும் என்ற நிலையில் தான் நாங்கள் வைக்கப்பட்டிருந்தோம் ” என அந்த தஞ்ச கோரிக்கையாளர்கள் கூறினர். அதையும் நீதிபதி ஏற்றார்.
பிரித்தானியாவில் முன்னர் இருந்த கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சி காலத்தில் ‘ருவண்டா கொள்கை’ என்ற அடிப்படையில், பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோருபவர்களை, பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் ஆபிரிக்க நாடான ருவண்டாவிற்கு அனுப்பும் கொள்கையில் இருந்த பிரச்சினைகள் காரணமாக அவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவது தாமதமானது எனவும் நீதிபதி கண்டறிந்தார்.
தமது தீர்ப்பில் நீதிபதி மார்கரெட் ஓபி அம்மையார் அந்த அகதிகள் அந்த முகாமில் சொல்லொணா துன்பங்களுக்கு ஆளாயினர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தீர்ப்பை கவனமாக பரிசீலித்து வருவதாக கூறியுள்ள பிரித்தானிய அரசின் பேச்சாளர் ஒருவர், “டீகோ கார்சியா நீண்டகால அடிப்படையில் குடியேறிகளை தங்கவைக்க உகந்த இடமாக இருந்ததில்லை எனவும், இப்போது அவர்களில் பெரும்பாலானவர்கள் பிரித்தானிய பெருநிலப் பரப்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களில் கவனம் செலுத்தப்படுகிறது” என தெரிவித்தார்.