இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் மூன்று மடங்காக அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூபாய்க்கு நிகரான டொலரின் பெறுமதி பாரிய அளவில் அதிகரித்துள்ளது. அத்துடன், வாகனங்களுக்கு விதிக்கப்படும் அதிக வரிகள், இறக்குமதி செய்யப்படும் நவீன வாகனங்களின் விலைகள் உயர்வு உள்ளிட்ட காரணிகளால் கடந்த 2020ஆம் ஆண்டை விட மூன்று மடங்கு அதிகமாக புதிய வாகனங்கள் விற்பனை செய்யப்படும் எனவும் வாகன இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர்.
ஜப்பானில் டொயோட்டா நிறுவனம் தயாரிக்கும் பஸ்ஸொன்று கடந்த 2020ஆம் ஆண்டில் 70 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட போதிலும் அதன் புதிய விலை 2 கோடியாக இருக்கும் என்றும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து, சுற்றுலா போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் இறக்குமதிக்கு கடந்த 14ஆம் திகதிமுதல் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த நாடாளுமன்ற அமர்வில் கூறியிருந்தார்.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஜனவரி மாத நடுப்பகுதியில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுமதி கிடைத்தவுடன் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.