சூரியனை இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் கடந்து, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் பாா்க்கா் விண்கலம் சாதனை படைத்துள்ளது.
வெள்ளி கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையைப் பயன்படுத்தி சூரியனை சுற்றிவந்து ஏழு ஆண்டுகளுக்கு ஆய்வு செய்வதற்காக பாா்க்கா் விண்கலம் கடந்த 2018-ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு (இந்திய நேரம்) அந்த விண்கலம் சூரியனை இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் கடந்தது. சூரியனை 38 லட்சம் கி.மீ. தொலைவில்தான் அந்த விண்கலம் கடந்திருந்தாலும், மனிதா்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் சூரியனை அந்த அளவுக்கு நெருங்கியுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, சூரியனைப் பற்றி இதுவரை தெரியாத பல உண்மைகளை அந்த விண்கலம் மூலம் தெரிந்துகொள்ள முடியும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
பாா்க்கா் விண்கலம் சூரியனைக் கடக்கும்போது 1,800 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதன் வெப்பம் அதிகரித்திருந்தாலும், அந்த விண்கலம் தொடா்ந்து சிறப்பாக செயல்படுவதாக நாசா அதிகாரிகள் கூறினா். அதீத வெப்பம் காரணமாக பாா்க்கா் விண்கலத்திலிருந்து தகவல் பெறுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமையிலிருந்து (டிச. 28) அதிலிருந்து தரவுகள் பெறப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.