ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சீன விஜயத்தின்போது இலங்கை முன்வைக்க விரும்பும் எந்தவொரு புதிய திட்டங்களுக்கும் முழு அளவிலான ஒத்துழைப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், முன்வைக்க உத்தேசிக்கப்படுகின்ற புதிய திட்டங்கள் குறித்து அரசாங்கத்துக்குள் விசேட பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் பல சர்ச்சைக்குரிய விடயங்களுடன் நிறைவடைந்தது. நாட்டுக்கு பாதகமான பல ஒப்பந்தங்களில் ஜனாதிபதி கைச்சாத்திட்டதாக பலரும் குற்றம் சுமத்திய போதிலும், அவ்வாறான தீங்கு விளைவிக்கும் ஒப்பந்தங்கள் எதிலும் கைச்சாத்திடவில்லை என அரசாங்கம் அறிவித்தது. இதன் காரணமாக இந்திய விஜயத்தை தொடர்ந்து ஜனாதிபதியின் அடுத்த சீன விஜயத்தையே பலரும் உற்று நோக்குகின்றனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 12ஆம் திகதி சீனா செல்லவுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஜனாதிபதியின் சீன விஜயத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. இதற்குக் காரணம், சீனாவை நோக்கிய ஒரு சார்பு தன்மை அரசாங்கத்திடமிருந்து வெளிப்பட தொடங்கியுள்ளதாக கொழும்பை தளமாக கொண்ட மேற்குலக இராஜதந்திர தகவல்கள் சந்தேகங்களை வெளியிட்டுள்ளன.
அது மாத்திரம் அன்றி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் பின்னரே அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கை குறித்து ஒரு தெளிவான பார்வையை அனைவராலும் உணர முடியும். எவ்வாறாயினும் அண்மைய புவிசார் அரசியல் நிகழ்வுகளை நோக்கும் போது ஜனாதிபதியின் சீன விஜயம் மிகவும் விசேடமானதாக அமைகிறது. குறிப்பாக இந்த விஜயத்தை திட்டமிடுவதற்காக சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனை சம்மேளன தேசியக் குழுவின் உப தலைவர் கின் பொயோங் தலைமையிலான உயர் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்திருந்தது.
இந்திய விஜயத்தை நிறைவு செய்து கடந்த 17ஆம் திகதி நாடு திரும்பிய ஜனாதிபதி அநுரவை, மறுநாள் காலை (18ஆம் திகதி) சீனப் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில், சீன விஜயத்தின் போது முன்வைக்க விரும்பும் எந்தவொரு புதிய திட்டங்களையும் நடைமுறைப்படுத்த சீனா அரசு தயாராக இருப்பதான செய்தி இதன் போது தெரிவிக்கப்பட்டது.
இதுவரை எந்தவொரு ஜனாதிபதிக்கும் கிடைக்காத தனித்துவமான தீர்மானத்தை சீனா முன்வைத்துள்ள நிலையில், சீன விஜயத்தின்போது முன்வைக்க உத்தேசிக்கப்படுகின்ற புதிய திட்டங்கள் குறித்து கடந்த சில நாட்களாக அரசாங்கத்துக்குள் விசேட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், சீன விஜயத்தின்போது, தற்போது தடைப்பட்டுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை மற்றும் மீரிகம பகுதிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. எவ்வாறாயினும், இம்முறை ஜனாதிபதியின் சீன விஜயத்தின்போது சீன அரசாங்கத்துக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட ஜனாதிபதி தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
அத்துடன் சீன – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், துறைமுக நகர் முதலீடுகள், ஹம்பாந்தோட்டையில் உத்தேசிக்கப்படுகின்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சீன கப்பல் விஜயங்கள் உட்பட பல்வேறு இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து பரந்தளவில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.