போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் : அவுஸ்திரேலியாவிடம் மண்டியிட்டது இந்தியா

0
7
Article Top Ad

இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 184 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

மெல்பேர்னில் இடம்பெற்ற நான்காவது போட்டியின் 340 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய 79.1 ஓவர்களில் 155 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது.

இந்திய அணி சார்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிகப்பட்சமாக 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், ரிசப் பந்த் 30 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

ஏனைய அனைத்து வீரர்களும் ஒன்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர். அவுஸ்திரேலியா சார்பில் பட் கம்மின்ஸ் மற்றும் ஸ்கொட் போலன்ட் தலா மூன்று விக்கெட்டுகளையும், நேதன் லயன் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 474 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

ஸ்டீவ் ஸ்மித் 140 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், இந்திய அணி சார்பில் பும்ரா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 369 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

நிதிஷ் குமார் ரெட்டி 114 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பட் கம்மின்ஸ், நேதன் லயன் மற்றும் ஸ்கொட் போலன்ட் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

105 ஓட்டங்களை முன்னிலைப் பெற்றிருந்த அவுஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 234 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு 340 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

போட்டியின் இறுதி நாளான இன்று இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாறியிருந்ததுடன், முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டும் நிதானமாக துடுப்பெடுத்தாடி ஆறுதல் அளித்த போதிலும், அவுஸ்திரேலியா அணியின் அபார பந்து வீச்சில் ஏனைய வீரர்கள் தடுமாறியிருந்தனர்.

இறுதியில் 79.1 ஓவரில் இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 155 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்திருந்தது.

இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலைப் பெற்றுள்ளது. மேலும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் அவுஸ்திரேலியா பிரகாசப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, தென்னாப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here