மரணம், நிரந்தர அங்கீவனம் மற்றும் பல கோடி பெறுமதியான சொத்துக்களுக்கு சேதத்தை ஏற்படுத்தி, கண்டி, திகன மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மலையக முஸ்லிம்களுக்கு எதிராக ஆறு வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட இனவாத கலவரம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை வாக்குறுதியளிக்கப்பட்ட நாளில் வெளியிடப்படாமை குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திகன கலவரத்தில அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினருக்கும் தொடர்பு இருந்தது என்பதற்கான நம்பகமான ஆதாரங்களை 2024 ஜூலையில் ஒரு ஆவணப்படம் வெளிப்படுத்திய பின்னர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என உறுதியளித்தது.
2018ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பிலான விசாரணை அறிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிடாமை தொடர்பிலான ‘திகன முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் நடந்து 6 வருடங்கள்: நீதி எங்கே?’ என்ற ஆவணப்படம் கொழும்பில் காட்சிப்படுத்தப்பட்டதை அடுத்து, இந்த வருடத்திற்குள் விசாரணை அறிக்கையை வெளியிட எதிர்ப்பார்ப்பதாக ஆணையாளர் கலாநிதி கெஹான் குணதிலக பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.
வாக்குறுதி அளித்தமைக்கு அமைய 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் அறிக்கை வெளியிடப்படாமையால், பாதிக்கப்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் சார்பாக நேற்றைய தினம் (டிசம்பர் 30) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடிதம் எழுதிய கண்டியைச் சேர்ந்த ஊடகவியலாளர் எம்.ஐ.எம்.முசாதிக், சம்பவம் நிகழ்ந்த காலத்தில் இருந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பலமுறை நினைவூட்டியும் இந்த வருட இறுதிக்குள் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவில்லை என வலியுறுத்தியுள்ளார்.
மலையக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கலவரம் இடம்பெற்று ஏழு வருடங்களாகின்ற இந்த தருணத்தில் புதிய அரசாங்கத்தின் கீழாவது குறித்த அறிக்கையை விரைவில் பகிரங்கப்படுத்துமாறும் ஊடகவியலாளர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.
“இந்த சம்பவம் தொடர்பாக, கடந்த 6 ஆண்டுகளில் பல முறை நாடாளுமன்றத்தில் பேசப்பட்டுள்ளதோடு, இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரத்திற்கு வந்துள்ள புதிய அரசாங்கத்தின் கீழ் விரைவில் அறிக்கை வெளியிடப்பட வேண்டுமென நான் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.”
நாட்டின் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்த பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தற்போது சர்வதேச விசாரணையை கோருகின்றனர்