இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறலாம் – பிரித்தானியா எச்சரிக்கை

0
6
Article Top Ad

இலங்கையில் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக பிரிட்டன் பயணிகளுக்கு இங்கிலாந்து வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரபலமான சுற்றுலா தலங்களை பயங்கரவாத குழுக்கள் குறிவைக்க வாய்ப்புள்ளதாக, பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி தமது பயண ஆலோசனையில் தெரிவித்திருந்தது. அதனை புதுப்பித்து வெளியிட்டுள்ள ஆலோசனையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை செல்லும் இங்கிலாந்து நாட்டவர்கள், நெரிசலான பொது இடங்களைத் தவிர்த்தும், தங்கள் சுற்றுப்புறங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும். கடற்கரைகள், பார்கள் மற்றும் உணவகங்கள் போன்ற பிரபலமான சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்பதால் பிரித்தானிய பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உலகளவில் இங்கிலாந்தின் நலன்களையும் அதன் மக்களையும் பாதிக்கும் பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. வெளிநாடுகளில் இருக்கும்போது பயங்கரவாதத்தால் ஏற்படும் ஆபத்தை குறைப்பதற்கான உள்ளூர் ஊடக அறிக்கைகளையும் உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுமாறும் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான தொடர்ச்சியான மோதலின் விளைவாக அதிகரித்து வரும் உலகளாவிய பதற்றங்கள் காரணமாக வெளியுறவு அலுவலகம் சில இடங்களுக்கான பயண ஆலோசனையைப் புதுப்பித்துள்ளது.

அமெரிக்காவின் சில இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், பிரித்தானியா இந்த பயண ஆலோசனை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

அல்-கொய்தா மற்றும் டேஷ் (Al-Qaida and Daesh ) போன்ற பயங்கரவாத குழுக்கள் மோதலுக்கு பதிலளிக்கும் வகையில் தாக்குதல்களை நடத்த தங்கள் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. இது யூத, இஸ்ரேலிய அல்லது அதன் நட்பு நாடுகளுடன் தொடர்புடைய சமூகங்கள் மற்றும் நலன்களை இலக்காகக் கொண்டது என வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் கூறியுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் உட்பட இலங்கையின் பயங்கரவாத தாக்குதல்களின் வரலாற்றின் பின்னணியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here