அநுரவின் சீனப் பயணம் – இந்தியாவுக்கு ஏன் முக்கியத்துவமானது?

0
9
Article Top Ad

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கு இம்மாத நடுப்பகுதியில் மேற்கொள்ள உள்ள அதிகாரப்பூர்வ பயணம் மற்றும் அது தொடர்பில் வெளியாகும் செய்திகள் குறித்து புதுடில்லி தீவிர அவதானம் செலுத்தியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டதோ அதேபோன்று சீனாவுக்கான பயணமும் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக இராஜதந்திர வட்டாரத்தில் அவதானிக்கப்படுகிறது.

இலங்கையின் அரசியலில் செல்வாக்கும் செலுத்தும் பிரதான இரண்டு நாடுகளாக இந்தியாவும் சீனாவும் உள்ளன. இந்த இரண்டு நாடுகளையும் அமெரிக்க உட்பட மேற்குலகத்தையும் கையாள வேண்டிய நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளார்.

இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளின் முதலீடுகளை ஈர்ப்பதற்கு இருதரப்பையும் சமரசப்படுத்தவும் வேண்டும் என்பதால் இந்தியாவை போன்றே சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்த அநுரகுமார திசாநாயக்க, விரும்புவதாகவும் இந்தப் பயணம் பல நன்மைகளை இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கும் எனவும் அரச தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

என்றாலும், இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விவகாரங்கள் மற்றும் திட்டங்கள் தொடர்பில் இலங்கையும் சீனாவும் கலந்துரைந்துரையாடல்கள் மேற்கொள்கின்றனவா என்பது தொடர்பில் புதுடில்லி இந்த அரசாங்கம் அமைந்தது முதல் கழுகுப்பார்வை செலுத்தியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் தமது இந்திய பயணத்தின் போது, இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான எந்தவொரு விவகாரம் குறித்தும் இலங்கை அவதானமாகதான் செயல்படும் எனக் கூறியிருந்தார்.

சீன பயணத்தில் பல்வேறு ஒப்பந்தங்களில் அநுரகுமார திசாநாயக்க கைச்சாத்திட உள்ளார். குறிப்பாக இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து அவர், கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.

அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முன்வைக்கும் ஒரு திட்டத்தை முழுமையாக மானிய அடிப்படையில் செய்துக்கொடுக்கும் தூதுவொன்றை சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங், அனுப்பியுள்ளார். அநுரகுமார திசாநாயக்க, சீனாவுடன் நெருக்கமான உறவை பேண வேண்டும் என்ற செய்தியை அவர் இந்த அன்பளிப்பின் ஊடாக தெரிவிக்க விரும்புவதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக அநுரவின் சீனப் பயணம் பார்க்கப்படுவதுடன், இதுகுறித்து புதுடில்லியும் தீவிர அவதானம் செலுத்தியுள்ளது.

என்றாலும், இலங்கை வரலாற்றில் பலம்வாய்ந்த ஒரு தலைவராகவும் ஜனாதிபதியாகவும் அநுரகுமார திசாநாயக்க உருவெடுத்துள்ளதால் அவரை மகிழ்வித்து தமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ள காத்திருக்கும் சீனா, பெய்ஜிங்கில் இந்தியாவை காட்டிலும் சிறப்பான சிவப்பு கம்பள வரவேற்பொன்றை அளிக்க தயாராகி வருவதாகவும் இராஜதந்திர வட்டாரத்தில் அறிய முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here