இலங்கைக்குள் அடுத்துவரும் நாட்களில் ஒரு லட்சம்வரையான சட்டவிரோத குடியேற்றவாசிகள் நுழையக்கூடும் என புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
”116 மியன்மார் சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாட்டுக்குள் நுழைந்துள்ளனர். அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.
பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பணம் வழங்கிவிட்டே அவர்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். படகுக்கு மியன்மார் பணத்தில் 500 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பயணத்துக்காக 800 லட்சம், ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.” எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்கள் புகலிடக்கோரிக்கையாளர்கள் என அடையாளம் காணப்பட்டால் சர்வதேச சட்டத்திட்டங்களுக்கமைய நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு தேவையான உதவிகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.
பொலிஸார் முன்னெடுக்கும் விசாரணை மற்றும் புலனாய்வு பிரிவு தகவல்களுக்கமைய, இவ்வாறான சட்டவிரோத குடியேற்றவாசிகள் ஒருலட்சம்பேர் அடுத்துவரும் நாட்களில் இலங்கை வரவுள்ளனர். இது எமது நாட்டிக்குரிய சமூக பிரச்சினையாகும். அது பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. புலனாய்வு தகவல் பற்றியும் விசாரிக்கப்பட்டுவருகின்றது.” – எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.