புலம்பெயர் தமிழ் மக்களிடம் ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை ஜூலி சங் ஆதரிக்கின்றார்

0
17
Article Top Ad

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு புலம்பெயர் தமிழ் மக்களிடம் ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு அமெரிக்காவும் ஆதரவளித்துள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் வடக்கு, கிழக்கில் உள்ள இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு இதன் ஊடாக தீர்வு காண முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

“தொழில் வாய்ப்புகள் இல்லாமல் எமது இளைஞர்கள் படுகின்ற கஷ்டங்கள் பற்றி பேசியிருந்தோம். அதன்போது இங்கு தொழில் வாய்ப்புகள் இல்லாதபோது இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்ற அவல நிலைப் பற்றி குறிப்பிட்டிருந்தோம். தங்களால் குறிப்பிட்ட அளவு உதவிகளை மாத்திரமே செய்ய முடியும் எனவும் புலம்பெயர் தமிழர்களை இங்கு முதலீடு செய்ய கூறுவதன் ஊடாக இந்த பிரச்சினையை தீர்க்க முடியுமெனவும் அறிவுறுத்தினார்.”

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையில் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் இந்த விடயத்தை தெரிவித்ததோடு, நியாயமான உத்தரவாதங்கள் இன்றி புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்யமாட்டார்கள் என, தான் உள்ளிட்ட தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் அமெரிக்கத் தூதுவருக்கு பதிலளித்ததாக சுட்டிக்காட்டினார்.

“புலம்பெயர் உறவுகள் இங்கு வரவேண்டுமெனின் நியாயமான உத்தரவாதம் வழங்கப்பட்டால்தான் வருவார்கள் இல்லாவிடின் அவர்கள் வரமாட்டார்கள் எனவும் குறிப்பிட்டோம்.”

ஜனாதிபதித் தேர்தலின் இறுதிக்கட்டத்தின் போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அனுர குமார திஸாநாயக்க, வெளிநாடுகளில் உள்ள தமிழ் சமூகத்தை இலங்கைக்கு வந்து முதலீடு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற அயலக தமிழர் மாநாட்டுக்கு தமிழ்ப் பிரதிநிதிகள் புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக அமெரிக்கத் தூதுவருடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 60 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக கலந்துரையாடலின் பின்னர் சென்னை சென்ற இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.

“இலங்கையில் பொறுப்புக்கூறல், நீதி, நல்லிணக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அமெரிக்கா எவ்வாறு தொடர்ந்து ஆதரிக்க முடியும் என்பது குறித்து தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று ஒரு பயனுள்ள கலந்துரையாடல் நடைபெற்றது. உரையாடலை வளர்க்கும் முயற்சிகளுக்கும், நீடித்த செழிப்பு மற்றும் இலங்கையின் பாதையை மேம்படுத்துவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்,” என இந்த சந்திப்பு தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சங் குறிப்பிட்டிருந்தார்.

தேசிய பிரச்சினைக்கு சமஷ்டி முறைமையே தீர்வு என சுட்டிக்காட்டிய தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இந்த விடயத்தில் அமெரிக்கா ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடனான சந்திப்பில் கோரிக்கை விடுத்ததாகவும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் குறிப்பிடுகின்றார்.

“தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து கலந்துரையாடப்பட்டது. இலங்கை தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு சமஷ்டி முறையில்தான் அமைய வேண்டும் எனவும், அமெரிக்கா இந்த விடயத்தில் ஒத்துழைக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினோம். ஜெனீவாவில் ஆராயப்படும் இறுதி யுத்தத்தின்போது ஏற்பட்ட விடயங்கள் தொடர்பில் உண்மையை கண்டறிதல், உண்மையை கண்டறிந்த பின்னர் அதற்கான நீதியை வழங்குதல், அதன் பின்னர் மீண்டும் இவ்வாறான விடயங்கள் இடம்பெறுவதை தடுத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.”

13வது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உரிய முறையில் மாகாண சபைகளுக்கு வழங்கப்படாமையால் நிதி அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் நெருக்கடி நிலைகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

“காணி தொடர்பிலான விடயங்கள் பேசப்பட்டது. காணி விடயம் எனக் கூறப்படுகையில், எமது பிரதேசத்தில் குறிப்பாக மாகாண சபை அதிகாரங்களில் காணி அதிகாரங்கள் வழங்கப்பட்டாலும் கூட காணி அதிகாரங்கள் முறையாக கையளிக்கப்படவில்லை என்ற விடயம் பேசப்பட்டதோடு, பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாத சூழ்நிலை நிதி அதிகாரங்களை பயன்படுத்த முடியாத சூழ்நிலை காணப்படுகிறது போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.”

இக்கலந்துரையாடலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.