இஸ்ரேல் – காஸா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் காஸாவில் சிறுவனைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறியதாகத் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு காஸா பகுதியில் உள்ள ரஃபாவைச் சேர்ந்த பாலஸ்தீனச் சிறுவனை மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று (ஜன.20) துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளது.
இஸ்ரேல் – காஸா இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த ஞாயிறன்று நடைமுறைக்கு வந்த நிலையில் இஸ்ரேல் அந்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதல் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்தக் காணொளியில் சுடப்பட்ட சிறுவனைக் காப்பாற்ற வந்த ஒரு நபரும் துப்பாக்கியல் சுடப்படுவது பதிவாகியுள்ளது. இதனால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் சிறுவன் பலியானது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் அரசு அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.
நேற்று (ஜன. 20) காஸாவில் இருந்து மூன்று இஸ்ரேலியக் கைதிகள் விடுவிக்கப்பட்டு, அதற்கு பதிலாக 90 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்டனர்.
காஸாவில் 46000 -க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட இந்தப் போர் முடிவடைந்ததை எண்ணி மக்கள் பெருமூச்சு விடும் நேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் உலகளவில் கண்டனங்களைப் பெற்றுள்ளது.