உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது அல்லது நான்காவது வாரத்தில் நடத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமென தான் நம்புவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான வரைவு சட்டமூலத்தை அனைத்துக் கட்சிகளும் கூட்டாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலின் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நிறைவுறுத்தியுள்ள உயர் நீதிமன்றம், தனது ரகசிய தீர்ப்பை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற சபாநாயகருக்கும் அனுப்புவதாக இன்று (27) அறிவித்துள்ளது.
இரண்டு நாட்கள் நீடித்த வழக்கு விசாரணையை நிறைவுறுத்தி உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இந்த மனுக்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உள்ளிட்ட நான்கு தரப்பினர் தாக்கல் செய்திருந்தனர்.
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலை நடத்தும் நோக்கில் அரசாங்கம் செயல்பட்டுவருவதாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துவருகின்றனர்.
2025ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடுகள் இடம்பெற்றுள்ளன.
வரவு-செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டபின்னர் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.