ருவாண்டா ஆதரவு கொங்கோ கிளர்ச்சியாளர்கள் கொங்கோவின் கிழக்கில் உள்ள முக்கியநகரமான கோமாவை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
ருவாண்டா துருப்பினரின் உதவியுடன் கொங்கோ கிளர்ச்சியாளர்கள் 2 மில்லியன் மக்கள் வசிக்கும் ஏரிகரை நகரமான கோமாவிற்குள் திங்கட்கிழமை நுழைந்ததை தொடர்ந்து கடும் மோதல் இடம்பெற்றது.
ஒருதசாப்த காலத்திற்கு மேல்நீடிக்கும் மோதலின் ஒரு பகுதியாகவே இந்த புதிய திருப்பம் அமைந்துள்ளது.
கொங்கோ கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தொடர்ந்து கோமா நகர வீதிகளில் உடல்களை காணமுடிகின்றது மருத்துவமனைகள் நிரம்பிவழிகின்றன.
செவ்வாய்கிழமை இந்த நகரத்தின் பிரதான விமான நிலையத்தை கொங்கோ கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இதன் காரணமாக பொதுமக்களிற்கு நிவாரணங்களை கொண்டு செல்வதற்கான பிரதான வீதி நகரத்திலிருந்து துண்டிக்கப்படும் ஆபத்து எழுந்துள்ளது.
கோமா நகரத்தின் மீதான தாக்குதலி;கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
பல நாடுகள் ருவாண்டாவை கண்டித்துள்ளதுடன் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரியுள்ளன.
ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தடுப்பதற்கு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை எடுக்கவேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொங்கோவின் எம் 23 கிளர்ச்சிகுழுவிற்கு டுட்சி இனக்குழு தலைமைதாங்குகின்றது அவர்களிற்கு ருவாண்டா ஆதரவளிக்கின்றது.
30வருடங்களிற்கு முன்னர் ருவாண்டாவில் இனப்படுகொலை இடம்பெற்ற காலம் முதல் கொங்கோ இந்த மோதல்களில் சிக்குண்டுள்ளது.
30 வருடங்களிற்கு முன்னர் ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலை உலகை உலுக்கியமை குறிப்பிடத்தக்கது. ஹ_ட்டு தீவிரவாதிகள் டுட்சி இனத்தவர்களை இனப்படுகொலை செய்தனர். இதன் பின்னர் ஹ_ட்டு ஆட்சியாளர்கள் டுட்சிக்கள் தலைமையிலான படையினரால் பதவி கவிழ்க்கப்பட்டனர்.
இந்த இனப்படுகொலையில் ஈடுபட்ட சிலர் இன்னமும் கொங்கோவில் உள்ளனர் என ருவாண்டா குற்றம்சாட்டுகின்றது.
அவர்கள் கொங்கோ அரசபடைகளுடன் இணைந்து ஆயுதகுழுக்களை உருவாக்கியுள்ளனர் என தெரிவிக்கும் ருவாண்டா கொங்கோவில் உள்ள டுட்சிஇனத்தவர்களிற்கும் ருவாண்டாவிற்கும் அவர்களால் ஆபத்து எனவும் தெரிவிக்கின்றது.
கொங்கோ இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதுடன் ,ருவாண்டா ஆயுதக்குழுக்களை பயன்படுத்தி கனியவளங்களை கொள்ளையடிக்கின்றது என குற்றம்சாட்டுகின்றது.