இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று இரவு காலமானார்.
வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றியே அவர் காலமானார்.
மாவை சேனாதிராஜா வீட்டில் தவறி விழுந்த நிலையில், தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டதால் யாழ். போதனா வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக கடந்த செவ்வாய்க் கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது
1942 ஒக்டோபர் 27ம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதிலேயே காலமானார்.
இவரது இறுதி கிரியைகள் எதிர்வரும் 02ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற உள்ளது.
இரா.சம்பந்தனுக்கு பின்னர் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா நீண்டகாலமாக செயல்பட்டார்.
மாவை சேனாதிராஜா கடந்துவந்த பாதை
1942ஆம் ஆண்டு பிறந்த மாவை சேனாதிராஜா, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். யாழ்ப்பாணம் மாவட்ட மாவிட்டபுரத்தில் பிறந்து 1961ஆம் ஆண்டு முதல் அரசியல் போராட்டங்களில் பங்கேற்று வந்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் முதலில் பணியாற்றினார். பின்னர் ஈழத் தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகவும் பதவி வகித்தார்.
ஈழத் தமிழர் அரசியல் போராட்டங்களில் பங்கேற்றதால் அரசால் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் மாவை சேனாதிராஜா. 1980களின் இறுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஈபிஆர்எல்ப், டெலோ இயக்கங்களுடன் இணைந்து செயற்பட்டார். ஈழத் தமிழர் தலைவர்கள் அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் படுகொலைகளுக்குப் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினரானராக தேர்வானார்.
தமிழீழ விடுதலைப் புலிகளாள் அனைத்து ஈழத் தமிழர் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகவும் போட்டியிட்டு வென்றார். பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளே ஈழத் தமிழரின் ஏகப் பிரதிநிதி என்ற கோட்பாட்டையும் ஏற்றார்.
2014ஆம் ஆண்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளாக இலங்கை தமிழரசுக் கட்சி தலைவராக மாவை சேனாதிராஜா செயல்பட்டார்.
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் மாவை சேனாதிராஜா. அவரது மறைவுக்கு சிங்கள, மலையக, ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.