பொது மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் தீவில் இலட்சக்கணக்கான தொன் கனிய மணலை அகழும் முயற்சில் ஈடுபட்டுள்ள சர்வதேச நிறுவனங்கள் முன்னாள் இராணுவ உறுப்பினர்களை பணிக்கு அமர்த்தி உள்ளூர் ஏழை மக்களை ஒடுக்கி வருவதை சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.
“இந்த நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள், தற்போது பணியில் இல்லாத இராணுவ அதிகாரிகள் உட்பட, ஓரளவு அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடியவர்கள். இதன் மூலம், ஏழை, அப்பாவி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.”
பணத்திற்காக பாதாள உலகத்தினருக்காக கொலைகளை செய்பவர்கள் இராணுவத்தில் இருப்பதாக ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியான ஜனாதிபதி அறிவித்து பத்து நாட்களுக்குள், அரச மற்றும் வெளிநாட்டு முதலீடுகளினால் மன்னார் தீவில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களினால் உள்ளூர் மக்கள் படும் இன்னல்கள் தொடர்பில் மன்னார் பிரஜைகள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
2023 ஆண்டு மன்னாரில் இடம்பெற்ற பல கொலைகள் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள இருவர் இராணுவத்தில் உள்ளவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் தீவில் இலங்கை மின்சார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையம் மற்றும் வீதி அபிவிருத்தி காரணமாக நிலப்பகுதி நீரில் மூழ்குவதால் அப்பகுதி மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதை ஹேமந்த விதானகே, மன்னார் பிரஜைகள் குழுவுடன் புதன்கிழமை (29) நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தினார்.
“நாம் இதுவரை பார்த்தது என்னவென்றால், மன்னாரின் பெரும்பகுதி நீரால் நிரம்பியுள்ளது, தாழ்வான நிலங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன, மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர், அவர்கள் வேலை இழந்துள்ளனர், அவர்களுக்கு மலசலகூட வசதி இல்லை. மேலும், சிறுவர்கள் தண்ணீரில் இறங்கி பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ளது. அந்த வீடுகள் பல வாரங்களாக இந்த வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.”
பறவைகளுக்கு உணர்திறன் கொண்ட பிரதேசத்தின் ஊடாக மற்றுமொரு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்கும் திட்டத்தை வெளிப்படுத்திய சுற்றுச்சூழல் அந்த நிலையத்தில் தலைவர் ஹேமந்த விதானகே, நிலம் நீரில் மூழ்கியதற்கான காரணங்களை பின்வருமாறு விளக்கினார்.
“இதற்கு முக்கியக் காரணம் இந்தப் பிரதேசத்தின் பிரதான வீதிகளின் அபிவிருத்தி மற்றும் குறுக்கு வீதிகளின் அபிவிருத்தியே ஆகும். ஆனால் இலங்கை மின்சார சபையானது 100 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்குதைகயில் களிமண்ணைப் பயன்படுத்தி கடற்கரைக்கு சமாந்தரமான வீதியை உருவாக்கியுள்ளது. இங்கு, இந்த வீதியை அமைப்பதன் மூலம், இந்த தண்ணீர் வழிந்தோடும் வழிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது அவர்கள் மேலும் 20 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை 20 மின்கம்பங்களுடன் தலை மன்னார் நோக்கி அமைப்பதற்கான முயற்சியை முன்னெடுக்கையில், அந்த பகுதி உண்மையில் பறவைகளுக்கு மிகவும் உணர்திறன் வாய்ந்த பகுதி. மேலும் இது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி”
இந்தியாவின் அதானி நிறுவனத்தினால் மன்னாரில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட்டால் மன்னார் தீவின் கதி என்னவாகும் என்பது தொடர்பிலும் ஊடக சந்திப்பில் ஹேமந்த விதானகே விளக்கமளித்தார்.
“மேலும், அதானி வலுசக்தி நிலையம் அல்லது மின் நிலையத்தில் தீவு முழுவதும் பல இடங்களில் 56 கோபுரங்கள் நிறுவப்படவுள்ளது. இந்த கோபுரங்களை அமைக்கும் போது மீண்டும் அதே இடத்தில் களிமண்ணை பயன்படுத்தி வீதிகள் அமைக்கப்படும், எனவே, இந்த பகுதியில் வெள்ள நீர் இரு மடங்காகவோ அல்லது மூன்று மடங்காகவோ அதிகரிக்க வாய்ப்புண்டு.”
மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு அதானி நிறுவனத்துடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படவில்லையென்றாலும், இந்த விடயத்தை மீளாய்வு செய்து கொள்வனவு செய்யும் மின்சாரத்தின் விலையில் ‘தேவையான மாற்றங்களை’ மேற்கொள்ள குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
மன்னாரில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட காற்றாலையின் காரணமாக உயிரிழப்புகளை சந்தித்த கிராம மக்கள், இந்த முதலீட்டின் மூலம் தாங்கள் மேலும் கஷ்டப்பட நேரிடும் என தொடர்ந்தும் வலியுறுத்துகின்றனர்.
மன்னார் தீவில் ஓய்வுபெற்ற இராணுவத்தினர் மற்றும் எத்தகைய பலத்தையும் பயன்படுத்தக்கூடியவர்களின் உதவியுடன் மூன்று சர்வதேச நிறுவனங்கள் வைத்து பல இலட்சம் தொன் கனிய மணலை அகழ்வதற்கான முயற்சியை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் வெளிப்படுத்தியுள்ளார்.
“மேலும், ஒரியன் என்ற நிறுவனமும், மாஸ் மெட்டல் அன்ட் மினரல்ஸ் என்ற நிறுவனமும், அவுஸ்திரேலிய நிறுவனமான இல்மனைட் சேன்ட்ஸ் என்ற மூன்று நிறுவனங்களும் இந்த நேரத்தில் தாது கனிய மணல் அல்லது இல்மனைட் அகழ்வதற்கான அனைத்து தயார்படுத்தல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன.”
உள்ளூர்வாசிகளின் கடும் எதிர்ப்பு
2024 நவம்பரில் மன்னாரில் இலட்சக்கணக்கான தொன் கனிய மணலை அகழ்வதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக சர்வதேச நிறுவனத்திற்கு அனுமதி வழங்கும் நோக்கில், ஆய்வுகளுக்கு வந்த அரச அதிகாரிகள் தலைமையிலான முதலீட்டாளர்களின் முயற்சியை கிராம மக்கள் முறியடித்தனர்.
நில அளவை திணைக்கள அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள், மன்னார் மாவட்ட உதவி செயலாளர் உள்ளிட்ட 20ற்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவில் நவம்பர் 06, 2024 அன்று டைட்டேனியம் அகழ்விற்காக மாதிரிகளை எடுக்கும் நோக்கில், மன்னார் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓலைத்தொடுவாய், வள நகர் பிரதேசத்திற்கு சென்றவர்கள், பாரியளவிலான கனிய மணல் அகழ்விற்கான ஐந்து உரிமங்களைப் பெறுவதற்கு இலங்கை புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நிறுவனத்தின் பிரதிநிதிகளாகும்.
நவம்பர் மாத முற்பகுதியில் கிடைத்த அனுமதிக்கு அமைய, இலங்கை முதலீட்டுச் சபையின் வெளிநாட்டு முதலீட்டாளர் அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட வர்த்தக நிறுவனம் அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட ஒரியன் மினரல்ஸ் டை்டேனியம் சேன்ட்ஸ் (தனியார்) நிறுவனமாகும்.
“முதலீட்டு சபையின் வழிகாட்டுதலும் ஒத்துழைப்பும் இந்தப் பணியில் பெரும் உதவியாக அமைந்துள்ளது. புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் ஒப்புதல் மற்றும் ஒரியன் பெயரில் அனுமதி வழங்கியமை ஆகியவை அகழ்விற்காக விண்ணப்பிப்பதற்கான வேகத்திற்கு உதவியது. அடுத்த சில மாதங்களில் கிடைக்கும் முடிவுகள் நிறுவனத்திற்கு ஒரு நேர்மறையான தாக்கத்தை தரும்,” என டைட்டேனியம் சேன்ட்ஸ் நிர்வாக பணிப்பாளர் பேராசிரியர் ஜேம்ஸ் சியர்ல் அந்த நேரத்தில் தெரிவித்திருந்தார்.
டைட்டேனியம் சேன்ட்ஸ் முதலீட்டில் இருந்து எதிர்பார்க்கப்படும் வருமானம் இரண்டு பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் எனவும், வருடாந்தம் 150,000 தொன் கனிய மணலை அகழ்ந்து எடுப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அகழ்வு தொடர்பில் அரை நூற்றாண்டுக்கும் மேலான அனுபவமுள்ள புவியியலாளர் டக் பிரைட் குறிப்பிட்டுள்ளார். இதற்காக 122 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் முதலீடு செய்யப்படும். இதன் மூலம் சர்வதேச அளவில் இல்மனைட் உற்பத்தியாளர்கள் ஊடாக 600 உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.