பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் என ஊடக அமைப்புகளும் பல்வேறு சர்வதேச அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்தும் கடந்த ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் எதேசியதிகார போக்கில் செயல்பட்டிருந்தது,
இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்திருந்தார்,
அதன் பிரகாரம் அதற்கான ஆரம்பகட்ட அறிவிப்பை அரசாங்கம் இன்று வெளியிட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் புதிய திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ள என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.
குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் இன்று புதன்கிழமை மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இதனை உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.