ஐ.நா சபையில் எமக்கான உரையாடல் மறுக்கப்படுகின்றது : அருட்தந்தை மா.சத்திவேல்

0
1
Article Top Ad

ஐ.நா மனித உரிமை பேரவையில் எமக்கான உரையாடல் கதவையும் மூடுவதற்கு தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (05.02.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேசிய மக்கள் சக்தியாகிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனாதிபதியுமாகிய அநுர குமார திசாநாயக்க யாழ் அபிவிருத்திக் குழு கூட்டம் என வடக்கிற்கு வந்து தமது பிரபல்யத்திற்கும் அரசாங்கத்தின் இருப்பிக்கும் வடக்கு மக்களின் ஆதரவு பெருகி உள்ளதாக வெளிப்படுத்தியுள்ளார்.

அத்தோடு நில்லாது தமிழர் தாயக அரசியலுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் இறங்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தமிழர்களுக்கான கதவினை மூடுவதற்கு எடுக்கும் முயற்சியை தமிழ் தேசிய அரசியல் சமூகமும், சிவில் சமூகமும், பொதுமக்களும் சரியாக உணர்ந்து இனியும் கூட்டாக செயல்படா விடின் எம்மை நாமே அழித்துக் கொண்ட வரலாற்று தவறிழைத்த மக்களாவோம்.

தர்மபுரி முதலாவது மிகப்பெரிய இனப்படுகொலை பேரவலம் 2009 முள்ளிவாய்க்காலில் நிகழ்வதற்கு சர்வதேச மற்றும் வயது வளர்ச்சிகள் இலங்கை பேரினவாத ஆட்சியாளர்களுக்கு துணை நின்றதை விட எம்மத்தியில் செயல்பட்ட ஒட்டுக் குழுக்களின் பங்களிப்பு மிகப் பெரியது எனலாம்.

அன்று எமது போராட்டத்தை பாரிய அழிவுக்குள் தள்ளி முடிவுக்குள் கொண்டு வர துணை நின்ற ஒட்டுக் குழுக்களைப் போல் இன்றும் பேரினவாத அரசின் நேரடி முகவர்களாக பல அணியினர் வெளியரங்கமாகவும், மறைமுகமாகவும் இயங்கி தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க செயல்படுவதோடு சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நில ஆக்கிரமிப்புக்கு துணை நின்று ஒற்றை ஆட்சிக்குள் தள்ளிவிடவும் திட்டங்களை வகுத்து செயல்படுகின்றனர்.

இவர்களாலேயே சுதந்திர தின பேரணி நிகழ்த்தப்பட்டது. அது தமிழர்களுக்கு எதிரான எமது அரசியலுக்கு எச்சரிக்கை விடுக்கும் போராட்டமாகவே கொள்ளல் வேண்டும். தமிழர்களின் அரசியல் அதற்கான போராட்ட வரலாறு தெரியாத அரசியல்வாதிகளும் கோமாளி அரசியல்வாதிகளும் தற்போது எம்மத்தியிலே பெருகி வருவது அல்லது பெருக வைப்பது இன்னுமொரு ஆபத்தான முடிவாகவே அமையும்.

சிங்கள பௌத்த பேரினவாத அரசின் நில ஆக்கிரமிப்பின் உச்சக்கட்ட வெளிபாடாகவே தையிட்டி விகாரையும் தூவியும் அமைந்துள்ளது.படையினர் சட்டத்திற்கு புறம்பாக தனியார் காணிக்குள் அத்துமீறி பிரவேசித்து உரிமையாளர்களின் அனுமதியின்றியும் அரசு அமைப்புகளில் அங்கீகாரம் இன்றியும் அதனை நிர்மானித்துள்ளதோடு அங்கு வழிபாட்டுக்கு பக்தர்கள் இல்லாத நிலையில் ஒவ்வொரு போயா தினத்திலும் பக்தர்களை இறக்குமதி செய்வது தமிழர்களின் அரசியலுக்கு விடுக்கும் அச்சுறுத்தல் எனலாம்.

இதன் ஆபத்தை உணராதவர்கள் விகாரைக்கு எதிரான போராட்டத்தினை தனிக்கட்சி அரசியலாக பார்த்தனர்.ஏனைய கட்சிகளும், பொதுமக்களும் வேடிக்கை பார்த்ததன் விளைவை அண்மையில் நிகழ்ந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது.

அங்கு போராட்டத்தை கொச்சைப்படுத்தியதையும், அவமானப்படுத்தியதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. நட்ட ஈடு,மாற்று காணி என அரசுக்கு ஆலோசனை கூறுவது ஒரு புறம் இருக்க பெரும்பாலானவர்கள் மௌனம் காத்தமை எமது அரசியல் அவலத்தையும் வெளிப்படுத்தியது.

இது இவ்வாறு இருக்க கடந்த வருட ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மட்டுமல்ல அன்மையில் நடந்த யாழ் அபிவிருத்திக் குழு கூட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதியின் மக்கள் சந்திப்புகள் குறிப்பாக வல்வெட்டித்துறையில் அவருக்கான வரவேற்பு தேசிய மக்கள் சக்தியை மேலும் பலப்படுத்தியமையாக காட்டப்படுவதோடு அது தேசிய மக்கள் சக்தியுடன் மக்கள் ஒன்று படுதல் மட்டுமல்ல பெரும் தேசிய வாதத்துடன் ஒன்று படுவதாகவே தெற்கில் காட்டப்படுகின்றது. அதுவே பேச்சு பொருளாகியுமுள்ளது.

இதனை சாதகமாக்கிக் கொண்டே தற்போதைய அரசின் வெளிநாட்டு அமைச்சர் இம்மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு மா நாட்டுக்கு செல்ல உள்ளார். பேரவையின் கருத்துக்கள், ஆலோசனைகள் என்பவற்றை புறந்தள்ளி ஐ.நா மனித உரிமை பேரவையில் எமக்கான உரையாடல் கதவையும் மூடுவதற்கு தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கின்றது.

இந்நிலையில் தேர்தல் அரசியல் காப்பார் தமிழ் கட்சிகளின் கூட்டு மீண்டும் கனவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இதற்கு அதிகார போட்டியும் உன் கட்சி குழப்பங்களும் காரணமாக பலமான சிவில் சமூக கட்டமைப்பும் இல்லா காலகட்டம் இது. ஒற்றை ஆட்சி அரசியல் யாப்பு என்னும் தூக்குக் கயிறும் எம் கண் முன்னே தெரிகிறது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வட கிழக்கு இணைந்த தமிழர் தாயக அரசியலுக்கு எதிரான சிங்கள பௌத்த பெரும் தேசிய வாதத்தின் முகவர்களும், அரசியல் கோமாளிகளும், தமிழர் அரசியல் அபிலாசைகள் மற்றும் போராட்ட வரலாற்றின் அடிமுடி தெரியாத போலிகளாலும் தீவிரமாக மக்கள் மத்தியில் நச்சு அரசியலை பரப்பி திசை திருப்பிக் கொண்டு இருக்கின்றனர்.

அரசியல் சமூகமாக அடையாளப்படுத்திக் கொண்டிருப்போர் பொது வெளியில் அமைதி காப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னவர்களை விட பின்னவர்கள் ஆபத்தானவர்கள் என்பதை சுட்டிக் காட்டுவதோடு தந்தை செல்வாவின் “இனி தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” எனும் கூற்றினை மீள நினைவில் கொள்வோம்.கூட்டு அரசியலே எமக்கான தெரிவாக அமையட்டும் என்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here