அவுஸ்ரேலியா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று வியாழக்கிழமை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன் பிரகாரம் முதலில் நாளில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 90 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதேவேளை, உஸ்மான் கவாஜாவின் முதல் இரட்டை சதத்தால் முதல் டெஸ்டில் அவுஸ்திரேலியா அணி வெற்றிபெற்றிருந்தது.
முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த இலங்கை அணி, மீண்டும் எழுச்சி பெறும் நோக்கில் இந்தப் போட்டியில் கவனமாக செயல்படும் என வீரர்கள் கூறியுள்ளனர்.
முதல் போட்டியில் அவுஸ்திரேலியா அணி அனைத்து துறைகளிலும் இலங்கையை விட சிறப்பாக ஆதிக்கம் செலுத்தியது.
இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரமேஷ் மெண்டிஸ் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதுடன், வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோ மற்றும் துடுப்பாட்ட வீரர் லஹிரு உதார ஆகியோர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டவாது டெஸ்டில் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சகலத்துறை ஆட்டக்காரரான ரமேஷ் மெண்டிஸ், அணிக்கு வலுசேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மோசமான ஆட்டத்தைத் வெளிப்படுத்தியதால் ரமேஷ் மெண்டிஸ் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்தப் பின்புலத்தில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்டர் வீரரும் அணியின் முன்னாள் தலைவருமான திமுத் கருணாரத்ன இந்த போட்டியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடை கொடுக்க உள்ளார். இது அவரது 100ஆவது டெஸ்ட் போட்டியாகும்.
திமுத் கருணாரத்னவை வெற்றியுடன் இலங்கை அணி அனுப்புமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.