ஞாயிறு தினக்குரல், தினக்குரல் இணையம் ஆகியவற்றின் முன்னாள் பிரதம ஆசிரியரும் வீரகேசரி வட பிராந்திய பதிப்பின் ஆசிரியருமான மூத்த ஊடகவியலாளர் இராசநாயகம் பாரதி ஞாயிற்றுக்கிழமை (9) தனது 63ஆவது வயதில் காலமானார்.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியை பிறப்பிடமாகக் கொண்ட பாரதி, தினக்குரல் முன்னாள் உதவி ஆசிரியரான தேவகியின் துணைவரும் ஒரு பிள்ளையின் தந்தையுமாவார்.
பாரதி 1980களில் “ஈழமுரசு” பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றினார். அதன் பின்னர் “முரசொலி” பத்திரிகையின் ஆசிரிய பீடத்திலும் பணியாற்றிய நிலையில், கொழும்பை வதிவிடமாக்கிக் கொண்ட காலப்பகுதியில் “வீரகேசரி” பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றினார்.
1997ஆம் ஆண்டு “தினக்குரல்” பத்திரிகை தோற்றம் பெறவே அதில் தன்னை இணைத்துக்கொண்ட பாரதி, “ஞாயிறு தினக்குரல்” பத்திரிகையின் பிரதம ஆசிரியராக 2021ஆம் ஆண்டு வரை பணிபுரிந்ததுடன் தினக்குரல் ஒன்லைன் ஆசிரியராகவும் இருந்தார்.
பின்னர், மீண்டும் தனது மண்ணுக்குத் திரும்பிய பாரதி, “ஈழநாடு” பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றியதுடன் தற்போது வீரகேசரியின் வட பிராந்திய பதிப்பின் ஆசிரியராக பணிபுரிந்த வேளையிலேயே காலமானார்.
இவர் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் “ஆர்.பாரதி”, “அபிமன்யு”, “பார்த்தீபன்” (அவரது மகனின் பெயர்) ஆகிய பெயர்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்ததுடன் சர்வதேச ஊடகங்களுக்கும் அரசியல் கருத்துகளையும் செவ்விகளையும் வழங்கி வந்தவர் ஆவார்.
பல மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட ஊடக பயிற்சிப்பட்டறைகளிலும் வளவாளராக பாரதி பயிற்சிகளை வழங்கியுள்ளார்.
அதுமட்டுமன்றி, தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஸ்தாபக உறுப்பினரான பாரதி, பின்னர் அதன் தலைவராகவும் செயலாளராகவும் இருந்துள்ளார்.
பாரதியின் பூதவுடல் தற்போது யாழ். திருநெல்வேலியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
எழுத்தில் நேர்மையையும் பத்திரிகைப் பணியில் உயர் அர்ப்பணிப்பையும் கொண்டு செயலாற்றிய பாரதி இராசநாயகத்தின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் இரங்கல்
“தமிழ் பத்திரிகைத்துறையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிய திரு. பாரதி, தினக்குரல் ஞாயிறு பதிப்பின் ஆசிரியராகவும், யாழ்ப்பாணத்தில் வீரகேசரி பத்திரிகையின் பிராந்திய ஆசிரியராகவும் சேவையாற்றியவர்.
அவரது பத்திரிகைப் பணிகளில் வெளிப்பட்ட நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் சமூகத்துக்கான அர்ப்பணிப்பு என்றும் மகத்தான பாராட்டுக்குரியது.”
ஊடகவியலாளர் பாரதியின் மறைவு தமிழ் ஊடக உலகுக்கு பேரிழப்பு – டக்ளஸ் தேவானந்தா
“அச்சு ஊடகத் துறையில் ஆழமான தடங்களை பதித்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் அவர்களின் மறைவு, தமிழ் ஊடகத் துறைக்கு பாரிய வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது.
அமைதியான அணுகுமுறைகளையும் ஆழமான கருத்தியலையும் கொண்டிருந்த அமரர் பாரதி அவர்கள், ஊடக அறத்தின் வழிநின்று அனைத்து தரப்பினருடனும் உறவுகளை பேணியவர்.
எமது கருத்துக்களில் இருக்கின்ற நியாயங்களை புரிந்துகொண்டு ஒத்துழைப்புக்களை வழங்கியவர்.
அன்னாரின் இழப்பு, தமிழ் ஊடகத்துறையையும் தாண்டி தமிழ் பேசும் மக்களுக்கே பேரிழப்பாக அமைந்திருக்கிறது.
அன்னாரின் இழப்பினால் துயருற்று இருக்கும் அனைவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்”
இறுதி கிரியை எதிர்வரும் வியாழக்கிழமை (13.02.20025) இடம்பெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் விரிவித்துள்ளனர்.