அதானி நிறுவனத்துடன் மீண்டும் பேச்சு நடத்தும் இலங்கை

0
25
Article Top Ad

அதானி நிறுவனம் இலங்கையில் மன்னார் பிரதேசத்தில் நிர்மாணிக்க திட்டமிட்டிருந்த ஒரு பில்லியன் டொலர் முதலீட்டுடனான காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்திலிருந்து விலகி கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்திருந்த நிலையில், இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களின் தலையீட்டில் அடுத்தவாரம் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையொன்றை நடத்த இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மன்னாரிலும், பூநகரியில் முன்னெடுக்கப்படவிருந்த காற்றாலை மின்சார உற்பத்தி மற்றும் மின்விநியோக திட்டங்களில் இருந்து வெளியேறுவதாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் கடந்த புதன்கிழமை அறிவித்ததுடன், இலங்கை முதலீட்டு சபைக்கு உத்தியோகப்பூர்வ கடிதமொன்றையும் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அனுப்பியிருந்தது.

இலங்கையில் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் 484 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தினை அமைப்பதற்கு இத்திட்டத்தின் ஊடாக இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன.

மின்விநியோகத்தை தென்பகுதி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விஸ்தரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன், மேலும் 2 மின்சார மையங்களை உருவாக்குவதற்குமான வேலைத் திட்டமும் அதானி நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்படவிருந்தது.

அது தொடர்பாக அதானி நிறுவனம் இலங்கையில் அரச உயர் அதிகாரிகளுடன் 14 சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தியிருந்தது. அத்துடன் மேற்படி வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளுக்காக 5 மில்லியன் டொலர் வரை செலவிடப்பட்டுமுள்ளது.

இந்த நிலையில், மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் மீண்டும் மீளாய்வு பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்திற்கு தகவல் கிடைத்திருப்பதாகவும், அது தொடர்பில் நிறுவனத்தின் நிர்வாக சபையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் எப்படி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

அந்தவகையில், இலங்கையின் இறைமையை முழுமையாக மதிப்பதாகவும், எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஏனைய வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராக உள்ளதாகவும், கௌரவத்துடன் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதிலிருந்து விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் அதானி நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்தத் திட்டம் தொடர்பான பேச்சுகளில் ஈடுபட இருநாட்டு அரசுகளும் இணங்கியுள்ளதாகவும் அடுத்தவாரம் இந்தப் பேச்சுகள் இடம்பெறும் என்றும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.