கனடா – டொராண்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்த விமானத்தில் பயணித்த 80 பேரும் உயிர் தப்பினர். 18 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மின்னியாபோலிஸில் இருந்து வந்த டெல்டா விமானத்தில் 76 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்ததாக விமான நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விபத்து உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:15 மணியளவில் நடந்தது. விபத்தை அடுத்து இரண்டு ஓடுபாதைகள் மூடப்பட்டன.
“இந்த விபத்தில் எந்தவொரு உயிர் சேதமும் ஒப்பீட்டளவில் பாரிய காயங்களும் ஏற்படாததற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்,” என்று கிரேட்டர் டொராண்டோ விமான நிலைய ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா பிளின்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், விமானம் விபத்துக்குள்ளானமைக்காக காரணத்தை கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமானம் தரையிறங்கும் போது மணிக்கு 65 கி.மீ வேகத்தில் பனி வீசிக் கொண்டிருந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளன. அதில் விமானம் தலைகீழாக விழுந்திருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் பயணித்த பயணிகள் வெளியேறும் காட்சிகளும், தீயை தீயணையப்பு படை வீரர்கள் அணைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இது மாதிரியான விபத்து மிகவும் அரிதானது என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விமானம் புறப்படும் போது இந்த வகையிலான விபத்து இரண்டு முறை நடந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.
கடைசியாக கடந்த 2005இல் பியர்சன் விமான நிலையத்தில் பெரிய அளவில் விமான விபத்து ஏற்பட்டது. அப்போது பாரிஸில் இருந்து வந்த விமானம் தரையிறங்கும் போது பாதையை விட்டு விலகியதால் தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும் அதில் பயணித்த அனைவரும் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.