இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவுபடுத்த 2025ஆம் நிதியாண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் ரூ. 3,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியின் முதல் கட்ட நடவடிக்கையாக அனைத்து குடிமக்களுக்கும் இலங்கை தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க உத்தேசித்துள்ளது. அந்த டிஜிட்டல் அடையாள அட்டையின் ஊடாக ஏனைய அனைத்து டிஜிட்டல் தரவுகளை உள்வாங்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இந்த தனித்துவமான டிஜிட்டல் அமைப்பு பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான டிஜிட்டல் உள்கட்டமைப்பாக செயல்படும் என்றும், இந்தப் பணிகள் விரைவில் ஆரம்பமாகும் என்றும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவுபடுத்த அரசாங்கம் புதிய சட்டங்களையும் இயற்றும் முன்மொழிவுகளை வழங்கியுள்ளது. டிஜிட்டல் துறையில் உள்ள பிற சிறப்பு நிறுவனங்களைப் போலவே உயர் மட்ட டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபையை நிறுவுவதே அரசாங்கத்தின் முதல் நோக்கமாக உள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசாங்கம் சைபர் பாதுகாப்பு, தரவு தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை வலுப்படுத்த உள்ளது.
அண்மையில் தொடங்கப்பட்ட ‘GovPay’ தளம் போன்ற முயற்சிகளுடன் டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசாங்கம் பணத்தைச் சார்ந்திருப்பதை படிப்படியாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதைக்கு ஈட்டுச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணப்புழக்கம் குறைவடைந்து அனைத்துப் பரிமாற்றங்களும் டிஜிட்டல்மயமனால் ஊழல் – மோசடிகள் குறைந்து மக்கள் பாதுகாப்பான ஒரு பணச் சூழலை அனுபவிக்க முடியும் என அரசாங்கம் கூறுகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 15 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் அல்லது தேசிய பொருளாதாரத்தில் 12% க்கும் அதிகமாக வளர்ப்பதே இறுதி இலக்கு என அரசாங்கம் கூறுகிறது.
இந்த காலகட்டத்தில் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையிலிருந்து ஆண்டு ஏற்றுமதி வருவாயாக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கவும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளர்.