சுவிட்சர்லாந்தில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு இழப்பீடு கோரி சுவிஸ் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.
சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP) உடன் இணைந்து பீட்டர் & மோரேவ் SA சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த எம்மா லிடன் மற்றும் பெனடிக்ட் டி மோர்லூஸ் ஆகியோர் வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இலங்கைக்கு தமிழ் புகலிடம் கோருபவர்களை திருப்பி அனுப்புவதை உடனடியாக நிறுத்தி வைக்கவும், துன்புறுத்தலுக்கான அபாயத்தை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொண்டு நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்களையும் மறுபரிசீலனை செய்யவும் சுவிட்சர்லாந்தை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஈஎஸ் (ES) என பெயரிப்பட்டுள்ள குறித்த தமிழரின் வழக்கில் 150,000 சுவிஸ் பிராங்கை இழப்பீடு கோரப்பட்டுள்ளது.
இன்ற செவ்வாய்க்கிழமை (18) ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் தெரிவித்துள்ளதாவது,
ஈஎஸ் (ES) 17 வயதில் விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்ந்தார். 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் முடிவில், அவர் தனது குடும்பத்தினருடன் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தார்.
இலங்கையின் மிகவும் பிரபலமான இராணுவ முகாமான ஜோசப் முகாமில் அவர் தடுத்து வைக்கப்பட்டு, பல சந்தர்ப்பங்களில் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவர் பூசா தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டதுடன், அங்கு அவரது காதில் அடிபட்டு அவரது செவிப்புலன் நிரந்தரமாக சேதமடைந்தது.
விடுதலையான பிறகு, பாதுகாப்புப் படையினர் பல சந்தர்ப்பங்களில் ஈஎஸ் (ES)இன் வீட்டிற்கு வந்து, அவரையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்வதாக மிரட்டினர், அவரை உடல் ரீதியாக தாக்கினர் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் குறிப்பிட்டுள்ளது.
“இது ஐரோப்பிய நாட்டிலிருந்து இலங்கைக்கு ஒரு தமிழர் நாடு கடத்தப்பட்டு, பின்னர் தடுத்து வைக்கப்பட்டு மீண்டும் சித்திரவதை செய்யப்பட்டதை நாம் கண்ட ஒரே வழக்கு மட்டுமல்ல.
புகலிட அதிகாரிகள் ஆயுள் மற்றும் இறப்பு வழக்குகளைக் கையாளுகின்றனர், மேலும் இந்த வழக்குகளை மதிப்பிடுவது அதிகாரிகள் மிகவும் கவனமாகச் செய்ய வேண்டும், ”என்று சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டதின் நிர்வாக இயக்குனர் யாஸ்மின் சூகா கூறியுள்ளார்.
தனது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக பெயர் வெளியிட விரும்பாதஈஎஸ் (ES)என்று மட்டுமே அடையாளத்தை வெளியிட்டுள்ள அந்த நபர், இப்போது இங்கிலாந்தில் இருக்கிறார், அங்கு அவருக்கு 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது.
இந்த பின்புலத்திலேயே ஈஎஸ் (ES) சார்பில் சுவிட்சர்லாந்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.