இலங்கை இராணுவத்தினரால் சட்டவிரோதமாக தமிழரின் பூர்வீக நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரையை நீக்க கோரி பிரித்தானியாவிற்கான இலங்கை தூதரகம் முன்பாக மாபெரும் போராட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
எமது தாயக நிலப்பரப்பான யாழ்ப்பாணம் – தையிட்டியில் தனியாருக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாயகத்தில் மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவை உலக நாடுகளுக்குத் தெரிவிக்கும் வகையில் இந்த மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றதுடன், இதனை ‘தமிழீழ சுயநிர்ணய அமைப்பு’ ஏற்பாடு செய்திருந்தது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போதும் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். இந்த விகாரை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரித்தானியாவில் இந்தப் போராட்டம் நடைபெற்றதுடன், சர்வதேச நாடுகள் ஈழத் தமிழர்களுக்கான நீதிக்கான போராட்டத்தை திறந்த மனதுடன், பார்க்க வேண்டும் என்றும் போராட்டத்தில் கலந்துகொண்ட ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் வலியுறுத்தினர்.