உள்ளூராட்சித் தேர்தல் ; சு.க கதிரை சின்னத்தில் – ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டணி இன்னமும் முடிவில்லை

0
4
Article Top Ad

உள்ளூராட்சித் தேர்தலில் கதிரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை (20) நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.

சு.கவில் இருந்து பிரிந்துச் சென்ற முன்னாள் தரப்புகளை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையிலான குழு மேற்கொண்டுவந்த போதிலும் அந்தப் பேச்சுகளில் இணக்கப்பாடுகள் எட்டப்படாமையால் இந்த தீர்மானத்தை சு.கவின் மத்திய குழு எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் இடாப்பே உள்ளூராட்சித் தேர்தலிலும் பயன்படுத்தப்பட உள்ளது.

தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடுகள் 2025ஆம் நிதியாண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. இதற்காக உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்டமும் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக கட்சிகள் கூட்டணிகளை அமைக்க தீவிர பேச்சுகளில் ஈடுபட்டுள்ளன.

சு.க தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ள போதிலும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இன்னமும் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை. இரு கட்சிகளையும் இணைக்கும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி ஆகியன இம்முறை தனித்து தேர்தலை சந்திக்கும் முடிவை அறிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here