வரவு – செலவுத் திட்டத்தில் மலையகத் தமிழர்களுக்கு அரசாங்கம் ஒதுக்கிய நிதியில் 67 வீதமானவை இந்தியாவின் மானியம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் குற்றம் சுமத்தியுள்ளார்.
வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
”1700 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கையெடுத்த போது தேசிய மக்கள் சக்தியினர் எம்மை விமர்சித்தனர். 2138 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றனர். ஆனால், தற்போது 1700 ரூபாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியதை கைத்தட்டி வரவேற்கின்றனர்.
அது எவ்வாறு? நாம் கூறும் போது அதனை கடுமையாக எதிர்த்தனர். தற்போது வரவேற்கின்றனர். மனசாட்சியுடன் நடந்துக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஒரு சவாலை விடுகிறேன். முடிந்தால் 1350 ரூபாவிலிருந்து 1 ரூபா அடிப்படை சம்பளத்தை அதிகரித்துக் காட்டுங்கள். பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்பில் எமக்கு தெரியும்.
கடந்த அரசாங்கம் மற்றும் என்னை விமர்சித்தால் மலையக மக்களின் வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் ஏற்பட போவதில்லை. மக்களுக்கு நன்மைகளை செய்யுங்கள். அதற்கு நாமும் உதவி செய்கிறோம்.
இந்த மக்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் வரவு – செலவுத் திட்டத்தில் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. மலையக மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 67 வீதமான நிதி இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் நன்கொடையாகும்.
வீடுகள் எவ்வளவு கட்டினாலும் மலையக மக்களின் வாழ்க்கை மாறாது. அவர்களுக்கு காணி உரிமையை வழங்கினால் மாத்திரமே அவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். அதற்கு அப்பால் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வீடமைப்பு பற்றி நான் விமர்ச்சிக்கப் போவதில்லை. காணி உரிமையை வழங்க வேண்டும் என்பதே எமது கருத்து. நாம் பிச்சை கேட்கவில்லை. அது எமது உரிமையாகும். அதனையே கோருகிறோம்.
தேயிலை ஏற்றுமதியின் மூலம் 12 வீதமான தேசிய வருமானம் நாட்டுக்கு கிடைக்கிறது. இது இந்த மக்களின் பங்களிப்பாகும். எனவே, அவர்களின் அபிவிருத்திக்காக அதிக நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள வேண்டும்.” என்றார்.