“உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்“ – திசை திருப்ப பாதாள உலகக் குழுக்கள் முயற்சி

0
4
Article Top Ad

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளை திசை திருப்பும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் பாதாள உலகக் குழுக்கள் மூலம் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டில் ஸ்திரமற்ற நிலையொன்றை ஏற்படுத்த அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டி.டபிள்யூ. ஆர். பி.செனவிரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

”ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலக குழுக்களுக்கு இடையில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதையே கடந்த சில நாட்களாக இடம்பெறும் சம்பவங்கள் வெளிகாட்டுகின்றன.

இந்த முரண்பாடுகள் ஏற்பட பல்வேறு காரணிகள் உள்ளன. குறிப்பாக அவர்கள் பெறும் தரகுப் பணம், போதைப்பொருள் உட்பட பல காரணிகள் உள்ளன. அத்துடன், இங்கு அரசியல் தொடர்ப்புகளும் உள்ளன.

பாதாள உலக குழுக்கள் செயல்பட அரசியல் தொடர்புகள் இருந்தமையை நாம் அனைவரும் அறிவோம். இந்த காரணிகளின் பிரகாரம் தான் தற்போது சில சம்பவங்கள் உக்கிரமடைந்துள்ளன.

புதுகடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பிரகாரம் பொலிஸார் விரைந்து செயல்பட்டு சில மணித்தியாலங்களுக்குள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் கைதுசெய்தனர்.

அதேபோன்று மேல்மாகாணத்தில் பல சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இவ்வாறு இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விரைந்து செயல்பட்டு சட்டத்தை நிலைநாட்டி வருகின்றன.

பாதாள உலக குழுக்களை இயக்குபவர்கள் அதிகமாக வெளிநாடுகளில்தான் உள்ளனர். இது தொடர்பில் உரிய அரசுகளுடன் கலந்துரையாடி சந்தேகநபர்களை உள்நாட்டுக்கு அழைத்துவரும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 9 சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நாட்டுக்கு வெளியில் உள்ள சந்தேகநபர்கள் தொடர்பிலான சிவப்பு எச்சரிக்கையை இன்டர்போலிடம் வழங்கியுள்ளோம். அவ்வாறு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம்தான் சில சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

பாதாள உலக குழுக்களின் இருப்புக்கு கடந்தகாலத்தில் சில அரசியல் ஆதரவுகள் இருந்தன. தற்போது அவர்களை ஒடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைளின் பிரகாரம்தான் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

கடந்த காலத்தில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் குறித்த விசாரணைகளை எமது அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பில் சில குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சில சம்பவங்கள் தொடர்பில் வழக்குகள் நீதிமன்றத்தில் இறுதிகட்டம் வரை கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளோம். இந்த விசாரணைகளை திசை திருப்பும் நோக்கிலும் நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தவும் இவ்வாறான சம்பவங்களை நிகழ்த்துகின்றனர். ஆனால், இதற்கு ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டோம். இவ்வாறு விசாரணைகளை திசை திருப்ப முற்படுபவர்கள் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here