இலங்கையை அச்சுறுத்தும் துப்பாக்கிச் சூடுகள் – மக்கள் அச்சத்தில்

0
16
Article Top Ad

பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளதால் மேல் மாகாணத்தில் வாழும் மக்கள் இரவு வேளைகளில் அச்சத்துடன், பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

கடந்த சில வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த 19ஆம் திகதி புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகக் குழுவின் தலைவர்களின் ஒருவரான கனேமுல்ல சஞ்ஜீவ என்பவர் சுட்டுக்கொள்ளப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பொது மக்களிடையே பெரும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு தொடர்பில் அச்சுத்துடனேயே பொது மக்கள் தமது பயணங்களை மேற்கொள்கின்றனர். குறிப்பாக மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இரவு வேளையில் தமது பயணங்களை பெரும் அச்சத்துடனேயே மேற்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

கனேமுல்ல சஞ்ஜீவவின் சுட்டுக்கொள்ளப்பட்டு சில தினங்களுக்குள் கொட்டாஞ்சேனை பகுதியில் அனைவரையும் உலுக்கும் வகையில் மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றது.

தொடர்ச்சியாக இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இவை அனைத்தும் பாதாள உலகக் குழுக்களால் நிகழ்த்தப்படுவதாக கூறப்படுவதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சமான நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்டிருந்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதாள உலகக் குழுக்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த விசெட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பதால் பொது மக்கள் அச்சமின்றி தமது கடமைகளை செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.