வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோருக்கு நீதி கோரி இலங்கையில் நீண்டகாலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கின் தாய்மார்கள், தமது அன்புக்குரியவர்களின் தலைவிதி வெளிப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளனர்.
இராணுவத்திடம் சரணடைந்த தமது உறவினர்களுக்கு நீதி கோரி 8 வருடங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என இவ்வருட சர்வதேச மகளிர் தினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டித்த வடமாகாண தமிழ் தாய்மார்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.
வடமாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பங்களிப்புடன் கடந்த சனிக்கிழமை (மார்ச் 8) தமிழ் தாய்மார்கள் முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாமில் இருந்து, 15 வருடங்களுக்கு முன்னர் இராணுவத்திடம் தமது அன்புக்குரியவர்கள் கையளிக்கப்பட்ட வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்புப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
2017ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டத்தின் எட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டும், காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்தக் கோரியும், வீதியில் இறங்கிய தாய்மார், நீதிக்காக சர்வதேச தலையீட்டை வலியுறுத்தினர்.
மே 2009 இல் உள்நாட்டுப் போர் இரத்தக்களரியுடன் முடிவடைந்ததிலிருந்து, தமது கணவர், மகள்கள், மகன்கள், சகோதரர்கள் மற்றும் உறவினர்களை தமிழர் தாயகப் பிரதேச மக்கள் தேடி வருவதோடு, தொடர்ந்து போராடும் பெற்றோர்களில் குறைந்தது 350 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
52 பேரின் எலும்புகள் மீட்கப்பட்ட நிலையில் 2024ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதி மூடப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான உண்மையை வெளிப்படுத்த வேண்டுமெனவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கோரிக்கைகள் மற்றும் கோஷங்களை முன்வைத்து இந்த சர்வதேச மகளிர் தினத்தன்று ஆர்ப்பாட்ட பேரணியை அவர்கள் நடத்தினர்.
‘எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே, சர்வதேசமே பதில் சொல்’ போன்ற பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தாய்மார் ‘குற்றவாளிகளே நீதியை வழங்குவார்களா’, நீங்கள் கொண்டுச் சென்ற எங்கள் பிள்ளைகள் எங்கே’, போன்ற சிங்களத்தில் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியவாறு பேரணியில் செல்வதைக் காண முடிந்தது.
இலங்கையில் போர்க்குற்றம் புரிந்த அனைவரையும் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம் கொடுத்து நீண்டகாலமாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்த அவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது அன்புக்குரியவர்களின் கதி என்ன என்பதை வெளிப்படுத்துமாறு சர்வதேச மகளிர் தினத்தில் அரசாங்கத்திடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடும்பமாக சென்று ஒப்படைக்கப்பட்ட உறவுகள்
பாதுகாப்பு தரப்பினரிடம் உயிருடன் ஒப்படைக்கப்பட்டவர்களையே தமிழ் தாய்மார் தேடி வருவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட தலைவி கோகிலவாணி கதிராகமநாதன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் வலியுறுத்தினார்.
“மகளிர் தின போராட்டத்தை கறுப்புத் தினமாகத்தான் அனுஷ்டிக்கின்றோம். சிறுவர் தினம், சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் என எத்தனையோ தினங்கள் வந்தாலும் நாங்கள் கையளித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நீதியும் கிடைக்கவில்லை. குடும்பம், குடும்பமாக உயிருடன் கையளிக்கப்பட்டவர்களையே கோரி நிற்கின்றோம். எங்களுக்கான நீதி வேண்டும். இந்த உறவுகள் இறந்து கொண்டிருக்கின்றார்கள். நாங்களும் நாளை இருப்போமே தெரியவில்லை. கையளித்த உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை சர்வதேசம் சொல்ல வேண்டும். இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்தோம், எட்டு வருடங்களாக பதிலளிக்கவில்லை.”
அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் தமது அன்புக்குரியவர்களுக்கு நீதியை வழங்குவதற்கான எந்த சமிக்ஞையையும் வெளியிடவில்லை எனவும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த வாரம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்பு குழுவில் (CEDAW) பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுடறிய போராடும் தமிழ் தாய்மார்கள் பற்றி எதுவும் கூறவில்லை.
இலங்கை அரசால் இழைக்கப்பட்ட குற்றங்களுக்குப் பொறுப்பான உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் தண்டனையின்மையை அனுபவிக்கவும் வரப்பிரசாதங்களைப் பெறவும் அனுமதித்தமைக்காக நாட்டை ஆளும் அரசாங்கங்கள் சர்வதேச அளவில் விமர்சிக்கப்பட்டுள்ளன.