போர் நிறுத்தத்துக்கு தயாரில்லையெனில் கடும் நடவடிக்கை: ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

0
4
Article Top Ad

சவூதி அரேபியாவில் நடந்த அமெரிக்கா, உக்ரைன் பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஒப்புதல் அளித்துள்ள ஒருமாத போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ரஷ்யா குறிப்பிடத்தகுந்த பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

“ எங்களுடைய பிரதிநிதிகள் ரஷ்யாவுக்குச் செல்ல இருக்கின்றனர். ரஷ்யா போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். ரஷ்யாவுக்கு பேரழிவினை ஏற்படுத்தும் அந்நாட்டுக்கு மோசமான விளைவுகளை உண்டாக்கும் காரியங்களை என்னால் செய்ய முடியும். அம்முடிவினை நான் விரும்பவில்லை. ஆனால் நான் அமைதியைக் காண விரும்புகிறேன்.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அரேபியாவில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அந்நாடு முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக் கொண்டது.
ரஷ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் உக்ரைன் சம்மதம் தெரிவித்திருந்தது. இந்த போர்நிறுத்த ஒப்பந்தம், நிலம், கடல் மற்றும் வான்வழித்தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

ஆனால் ரஷ்யா இதுகுறித்து இன்னும் உறுதியான நிலைப்பாட்டினை எடுக்கவில்லை. ஒரு முடிவினை எட்டுவதற்கு முன்பாக அமெரிக்காவிடமிருந்து கூடுதல் தகவலுக்காக காத்திருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதனிடையே, உக்ரைனுடன் போர்நிறுத்தத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புக்கொள்வார் என்றாலும் அதற்கு முன்பாக தனது நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறார். இதனால் பேச்சுவார்த்தை இழுபறியாக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here