ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா சென்றுவந்த இந்திய வரலாற்று ஆய்வாளர் டாக்டர் மணிகர்ணிகா தத்தா, அனுமதிக்கப்பட்ட நாள்களைக் காட்டிலும் அதிகக் காலம் எடுத்துக்கொண்டதற்காக தற்போது பிரிட்டனிலிருந்து நாடுகடத்தப்படும் மிரட்டலுக்கு ஆளாகியுள்ளார்.
பிரிட்டனில் 12 ஆண்டுகளாக வசித்து வருவதுடன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் போன்ற மதிப்புமிக்க கல்விக்கழகங்களில் பணியாற்றியும் உள்ளார் இவர். இருப்பினும், ‘ஐஎல்ஆர்’ எனப்படும் காலவரையற்ற விடுப்புக்கான அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஒருவர் காலவரம்பு இன்றி பிரிட்டனில் வசிக்கவும் பணியாற்றவும் படிக்கவும் ஒருவகை குடிநுழைவுத் தகுதியாக இந்த ஐஎல்ஆர் விளங்குகிறது.
தத்தாவின் கல்விசார் பணிக்கு இந்திய ஆவணக் காப்பகங்களை நாடுவது இன்றியமையாத ஒன்று. எனவே, அவர் அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
பிரிட்டிஷ் உள்துறை அமைச்சின் விதிமுறைகளின்படி, ‘ஐஎல்ஆர்’ விண்ணப்பதாரர்கள் பத்தாண்டுகளில் 548 நாள்களுக்கு மேல் வெளிநாட்டில் இருக்க முடியாது. ஆனால், தத்தா 691 நாள்கள் வெளிநாட்டில் இருந்துள்ளதாக ‘த கார்டியன்’ தெரிவித்துள்ளது.
தமது பணி காரணமாகவும் விசா நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள்வதற்காகவும் ஆய்வுக்காக அவர் மேற்கொண்ட பயணங்கள் அத்தியாவசியமானவை என்று சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
கல்விசார் பணிக்கு வெளிநாட்டில் ஆராய்ச்சி மேற்கொள்வது முக்கியம் என்றாலும் பிரிட்டனில் இருக்க வேண்டிய நாள்களைக் கருத்தில் கொண்டு ஒருவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
“நாட்டை விட்டு போக வேண்டும் என்று மின்னஞ்சல் வந்தபோது எனக்கு ஒரே அதிர்ச்சி. இங்கே நான் 12 ஆண்டுகளாக இருக்கிறேன். நான் ஆக்ஸ்ஃபோர்ட்டில் படிக்க வந்ததிலிருந்து இங்குதான் எனது வாழ்க்கையின் பெரும்பகுதி இருந்துள்ளது. எனக்கு இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை,” என்று தத்தா ‘தி அப்செர்வர்’ நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இதற்கிடையே, தத்தாவின் கணவரின் ஐஎல்ஆர் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தத்தா தானாக வெளியேறாவிட்டால் மீண்டும் நாட்டுக்குள் வர பத்தாண்டுகள் தடை விதிக்கப்படுவதுடன் அனுமதிக்கப்பட்ட காலத்தைவிட அதிகக் காலம் தங்கியதற்குத் தண்டனையையும் எதிர்நோக்கக்கூடும் என்று உள்துறை அமைச்சு தத்தாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த முடிவை எதிர்த்து தத்தாவின் வழக்கறிஞர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தன் முடிவை மூன்று மாதங்களுக்குள் மீண்டும் மதிப்பீடு செய்ய உள்துறை அமைச்சு சம்மதித்துள்ளது.