உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் படையெடுத்தது. உக்ரைனின் பெரும்பாலான இடங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் ராணுவ உதவி வழங்கியன.
இதனால் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த தொடங்கியது. ரஷியா பல இடங்களில் பின்வாங்கியது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் உக்ரைன் பகுதிகளை ரஷியா ஆக்கிரமித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் 3 வருடங்களை தாண்டி சண்டை நடைபெற்று வருகிறது. சண்டை நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் உக்ரைன்- ரஷியா இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
30 நாட்கள் கொண்ட போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏறக்குறைய இரு நாடுகளும் சம்மதிக்கும் நிலையில்தான் உள்ளது.
இந்த நிலையில் நாளை ரஷிய ஜனாதிபதி புதின் உடன் பேச இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்று புளோரிடாவில் இருந்து வாஷிங்டனுக்கு செல்லும் வழியில் பத்திரிகையாளர்களுடன் உரையாடினார். அப்போது “செவ்வாய்க்கிழமை சில அறிவிப்புகள் வெளியாகுவதை நாம் பார்க்கலாம். நான் புதின் உடன் செவ்வாய்க்கிழமை பேச இருக்கிறேன். கடந்த வாரத்தில் போர் நிறுத்தம் தொடர்பாக பல்வேறு பணிகள் நடைபெற்றன. நாங்கள் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? எனப் பார்க்கிறோம்.
போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஒரு பகுதியாக நிலம் மற்றும் மின் நிலையங்கள் ஒரு பகுதியாக இருக்கும். நாங்கள் நிலங்கள் குறித்து பேச இருக்கிறோம். மின் நிலையங்கள் குறித்து பேச இருக்கிறோம்” என டிரம்ப் தெரிவித்தார்.
கடந்த வாரம் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. அந்த தடையை திரும்பப் பெற்றது. இதனைத் தொடர்ந்து டொனால்டு டிரம்ப்- புதின் இடையில் விரைவில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வோம் என ரஷியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.