பாகிஸ்தானுடன் கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட ரஷியா முன்வந்திருப்பது, இந்தியாவுக்கு மறைமுகமாக சொல்லப்படும் அறிவுறுத்தல் என்று இந்திய வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் கருதுகிறார்கள்.
ரஷியாவின் கொள்கைகளுக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்காவிட்டால், அது பாகிஸ்தானுடன் நட்பை பலப்படுத்தும் என்பதையே, இதன் மூலம் தெரிவிக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் – ரஷியா கடற்படை கப்பல்கள் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவிருக்கின்றன. இதற்காக ரஷியாவின் போர்க் கப்பல்கள் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்துக்கு வந்துள்ளன.
இதுவரை ரஷியா, இந்தியாவுடன் நெருங்கிய நட்புப் பாராட்டி வந்த நிலையில், இந்தியாவின் நேரடி எதியான பாகிஸ்தானுடன் சற்று இடைவெளியைப் பின்பற்றி வந்தது. இந்த நிலையில்தான், பாகிஸ்தான் – ரஷியா கூட்டுப் பயிற்சி மிகவும் கவனிக்கத்தக்கதாக மாறியிருக்கிறது.
தற்போது சர்வதேச அளவில் பல நாடுகளுக்கு இடையேயான போர்ப் பதற்றம், வெளியுறவுக் கொள்கைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் போன்றவற்றால் பாகிஸ்தானுடன் ரஷியாவும் நெருங்கத் தொடங்கியிருக்கிறது.
கராச்சி துறைமுகத்துக்கு வந்த ரஷியப் போர்க் கப்பல்களை, பாகிஸ்தான் நாட்டு கடற்படை அதிகாரிகள் வரவேற்றது தொடர்பான விடியோவை பாகிஸ்தான் இராணுவம் தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் இந்தப் பதிவை மேற்கோள் காட்டியிருக்கும் ரஷிய தூதரகம், “ரஷ்யா-பாகிஸ்தான் கடல்சார் ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க சாதனை படைக்கப்பட்டிருப்பதாக” பதிவிட்டிருக்கிறது.
இதன் மூலம், இந்தியா, தனது வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்காமல், அமெரிக்காவுடனோ அல்லது தனக்கு எதிரான நாடுகளுடனோ கைகோர்க்குமானால், பாகிஸ்தானுடன் தன்னுடைய உறவு பலப்படுத்தப்படும் என்று ரஷியா தெரிவிக்க விரும்புகிறதா என்ற கேள்வி எழுகிறது.
அதேவேளையில், தற்போதைய சர்வதேச நடப்புகளின்படி, ரஷியாவும், பாகிஸ்தானும் தனித்துவிடப்படலாம் என்ற நிலையில், அவைகள் கைகோர்க்கத் தொடங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.