இலங்கை முழுவதும் அண்மைக்காலமாக சிக்குன்குனியா நோயாளிகள் அதிகமாக பதிவாகி வந்தனர்.
கொழும்பின் புறநகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள டெங்கு கொசுக்களின் அதிகரிப்பே இந்த நிலைமைக்கு காரணமென மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துவந்தனர்.
ஆனால், கொசுக்களை கட்டுப்பத்துவதற்கான உரிய திட்டமொன்றை அரசாங்கம் முன்மொழியவில்லை என்பதுடன், இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், இலங்கை முழுவதும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அண்மைக்காலத்தில் பாரிய அளவில் அதிகரித்து வருவதால், அதன் அறிகுறிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த நோய் பொதுவாக திடீரென அதிக காய்ச்சலுடன் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து கடுமையான மூட்டு வலி ஏற்படுகிறது. இது குறைந்தது ஒரு மாதத்திற்கு நீடிக்கும்.
தசை வலி, தலைவலி, குமட்டல், சோர்வு மற்றும் தோல் வெடிப்புகள் ஆகியவை பிற பொதுவான அறிகுறிகளாகும்.
பெரும்பாலான நோயாளிகள் ஒரு வாரத்திற்குள் குணமடைந்தாலும், நீடித்த மூட்டு வலி பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட நீடிக்கும். குறிப்பாக வயதான நபர்களிடையே நோயின் தன்மை நீடிக்கும்.
கொசு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுவதுதான் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ள வழியாகும் என்று நிபுணர் வலியுறுத்துகிறார்.