வாரியபொல – மினுவங்கொட பகுதியில் விமானப்படைக்குச் சொந்தமான ஜெட் விமானம் இன்று வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான K8 பயிற்சி ஜெட் விமானம் என்ற விமானமே இன்று (21) காலை இவ்வாறு விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த நேரத்தில் விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்ததாகவும், அவர்கள் இருவரும் பாதுகாப்பாக வெளியேற முடிந்தது என்றும் விமானப்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விமானத்தில் தலைமை பயிற்சி பயிற்றுவிப்பாளர் விமானியும், பயிற்சி விமானி அதிகாரியும் இருந்துள்ளனர். பாராசூட்டின் உதவியுடன் அவர்கள் விமானத்தில் இருந்து வெளியேறினர்.
இந்த ஜெட் விமானம் கட்டுநாயக்க விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டுள்ளது.
ரேடார் தொழில்நுட்ப அமைப்பின் செயலிழப்பு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விமானம் தீயில் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த விமான விபத்து குறித்து விசாரணை செய்ய ஏழு பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.