அநுர அரசாங்கத்தின் கன்னி பட்ஜெட் நிறைவேற்றம் – ஜனாதிபதி கூறியதென்ன?

0
10
Article Top Ad

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு- செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நேற்றுவெள்ளிக்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதன் மூலம் 114 மேலதிக வாக்குகளால் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு, முதியோர் மற்றும் விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவு அதிகரிப்பு உட்பட பல்வேறு சலுகைகளை ஜனாதிபதி, தமது அரசு செலவுத் திட்டத்தில் அறிவித்திருந்தார்.

18ஆம் திகதி முதல் இன்று 21ஆம் திகதிவரை வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இடம்பெற்று நிறைவேற்றப்பட்டது. குழுநிலை விவாதங்களை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை மார்ச் 21ஆம் திகதி மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டது.

ஜனாதிபதி கூறியதென்ன?

பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்துவதற்குரிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் பற்றி போலி தகவல்களை பரப்ப வேண்டாம், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் எதிரணி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்நாட்டு மக்களை ஒன்றிணைத்து நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு கடந்தகாலங்களில் கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளை ஆட்சியாளர்கள் கைநழுவிவிட்டனர். எமக்கு அதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது. அந்த வாய்ப்பை நாம் தவறவிடமாட்டோம் எனவும் ஜனாதிபதி கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,

‘ கடந்த டிசம்பர் முதலாம் திகதியே வங்குரோத்து நிலையிலிருந்து அதிகாரப்பூர்வமாக நாடு மீண்டது. இதனையடுத்தே நிறுத்தப்பட்டிருந்த வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு ஜப்பான் நடவடிக்கை எடுத்தது. சீனாவின் 76 வேலைத்திட்டங்களையும் ஆரம்பிப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டது. அதேபோல இந்திய பிரதமரின் வருகையின் பின்னர் சம்பூர் திட்டம் ஆரம்பமாகும். நாட்டில் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவதற்குரிய சமிக்ஞைகளை வெளிப்படுத்தியதால்தான் இதுவெல்லாம் நடக்கின்றது.” என்று குறிப்பிட்டார்.

எமது பொருளாதாரம்மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். எனவே, பொருளாதார ஸ்தீரத்தன்மையையும் ஏற்படுத்த வேண்டும். எதிரணிகள் அரசியல் செய்யும் உரிமை உள்ளது. அதற்காக பொருளாதார ஸ்தீரமற்ற தன்மையை ஏற்படுத்தும் வகையில் பொய்யுரைக்ககூடாது. விமர்சனங்களை முன்வையுங்கள். ஆனால் போலி தகவல்களை வெளியிடவேண்டாம். அவ்வாறு வெளியிடப்படும் தகவல்களால் பங்கு சந்தையில் தாக்கம் ஏற்படக்கூடும். முதலீட்டாளர்கள் அச்சமடையக்கூடும்.” எனவும் ஜனாதிபதி அநுர குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியம் இல்லாது செய்யப்படும். அதற்குரிய சட்டமூலம் விரைவில் வரும். 10 லட்சமாக உள்ள எம்.பிக்களுக்குரிய காப்புறுதிய இரண்டரை லட்சமாக குறைக்கப்படும். வாகன பேமீட் வழங்கப்படமாட்டாது.

தேசிய மக்கள் சக்தியின் பயணத்தைவிடவும் சிறப்பானதொரு மாற்று பயணம் இருந்தால் சொல்லுங்கள், இல்லை. எனவே, எமது பயணத்துக்கு எதிரணிகளுக்கு ஆசிர்வாதம் வழங்குவதைத்தவிர வேறு வழியில்லை. ஊடக கண்காட்சிமூலம் அரசியல் நடத்தலாம் என நினைத்த காலம் மலையேறிவிட்டது. எமது நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை நாம் உருவாக்கிவிட்டோம்.” – என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here