அடுத்த வருடத்துக்குரிய வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முன்வைக்கப்படும் எனவும், ஜுன் மாதம் முதல் யோசனைகள் உள்வாங்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பொதுத்தேர்தலைபோன்றே உள்ளுராட்சிசபைத் தேர்தலிலும் மக்கள் வரலாற்று வெற்றியை வழங்குவார்கள் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.
தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு,
“2025 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி இன்னும் 8 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். தற்போது நிதி உள்ளது, எனவே, அதற்குரிய வேலைத்திட்டங்களை உரிய வகையில் முன்னெடுக்க வேண்டும்.
திறைசேரிக்கு இவ்வருடத்தில்தான் அதிகளவு வருமானமும் வரவுள்ளது. எனவே, தடையின்றி நாம் நிதியை வழங்குவோம். உரிய வகையில் திட்டங்கள் நிறைவுசெய்யப்பட வேண்டும். அதிகாரிகளுக்கு தற்போது வேலைப்பளு அதிகம். அதனால்தான் சம்பளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு கிராமத்தில் வேலை செய்வதற்கு அரசியல் தலைமைத்துவமும் அவசியம். கிராமத்தில் வேலைத்திட்டங்களுக்குரிய அரசியல் தலைமைத்துவம்தான் பிரதேச சபையாகும். நாட்டுக்குரிய அரசியல் தலைமைத்துவத்தை மக்கள் வழங்கிவிட்டார்கள். எனவே, கிராமத்துக்குரிய தலைமைத்துவத்தையும் வழங்க வேண்டும்.
மத்திய அரசாங்கத்துடன் செயற்படக்கூடிய கிராம அரசாங்கமொன்று அவசியம். இரு தரப்பும் இரு வழிகளில் சென்றால் திட்டங்களை உரிய வகையில் முன்னெடுக்க முடியாது. எனவே, கிராமங்களை கட்டியெழுப்புவதற்குரிய ஆணையையும் எமக்கு தாருங்கள். அரசாங்கமும் எமது, கிராமமும் எமது என்ற நிலை உருவாகும் என நம்புகின்றோம்.
2026 ஆம் வருடத்துக்குரிய வரவு- செலவுத் திட்டத்துக்குரிய யோசனைகளை உள்வாங்கும் நடவடிக்கை ஜுன் மாதம் ஆரம்பமாகும். எதிர்வரும் நவம்பர் மாதம் பாதீடு முன்வைக்கப்படும்.”- என்றார்.