இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த வேண்டும். 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இந்திய – இலங்கை கூட்டுப் பிரகடனங்களின்படி நாம் செயல்பட வேண்டும். அதனை விடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தின் போது இந்திய திட்டங்களை இரத்து செய்வதாகக் கூறுவது பொறுத்தமற்றது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :
2023 – 2024 கால கட்டத்தில் எமது அரசாங்கம் மீள்புதுப்பிக்கத்தக்க வலு சக்தி தொடர்பில் பல்வேறு முன்மொழிவுகளை அனுமதித்திருந்தோம். இலங்கையின் வலுசக்தி தேவையை அறிந்து தான் நாம் அந்த தீர்மானங்களை எடுத்தோம்.
அந்த வெளிநாட்டு முதலீடுகளுடன் நாட்டில் புதிய முதலீடுகளை ஏற்படுத்துவதற்கு அந்த வலுசக்தி திட்டங்களுக்கான முதலீடுகளும் கிடைக்கப் பெற்றன. இரண்டரை பில்லியன் டொலர் வேலைத்திட்டங்கள் எமக்கு கிடைக்கப் பெற்றன.
இந்த வேலைத்திட்டங்களை அங்கீகரித்த சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு வேலைத்திட்டங்களுக்காகவும் குழுக்கள் ஊடாக விலைகள் நிர்ணயிக்கப்பட்டன. அதற்கு பல்வேறு காரணிகளும் இருந்தன. அந்த காரணிகள் அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டே இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதானி நிறுவனம் மற்றும் ஹேலீஸ் நிறுவனம் தொடர்பில் தெரிவிக்க விரும்புகின்றேன். நாம் முதலில் நிதி அமைச்சினால் வேலைத்திட்ட குழுவொன்றை நியமித்தோம்.
அதன் பின்னர் இந்த நிறுவனத்துடன் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுப்பதற்காக அமைச்சரவையில் இந்த வேலைத்திட்டம் தொடர்பில் கலந்தாலோசித்து தீர்மானமொன்றை எடுப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கைக்கு அமையவே இறுதி விலை தீர்மானிக்கப்பட்டது.
ஹேலீஸ் நிறுவனத்தின் வேலைத்திட்டம் 50 வோல்ட் ஆகும். அதானி நிறுவனத்தின் வேலைத்தி;ட்டத்துக்கும் இதற்குமிடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
அதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அந்த அனைத்து காரணிகள் தொடர்பிலும் ஆவணங்களால் மதிப்பாய்வு செய்வதற்காக அரசாங்கத்துக்கு இயலும். நாம் அனைத்தையும் அதிகாரிகள் மார்க்கத்திலேயே செய்திருக்கின்றோம்.
முதலில் புலம்பெயர்ந்த பறவைகள் பற்றிய ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. சுற்றுச்சூழல் நிலைமைகள் பறவைகளின் வருகையைப் பாதிக்கலாம். இதற்காக, மன்னாரில் ஹேலிஸ் திட்டம் குறித்து அரசாங்கம் ஒரு ஆய்வை நடத்தியது. அதைச் செய்ய அதானி பணம் செலுத்த வேண்டியிருந்தது.
இரண்டாவது நிலத்தை கையகப்படுத்துவதாகும். நிலத்தை கையகப்படுத்தும் போது, மின்சாரசபையின் சொந்த நிலத்தை மன்னாருக்கு வழங்க முடிவு செய்தோம். அதை ஹேலீஸ் நிறுவனம் பெற்றது. அதானி நிறுவனம் அந்த நிலத்தை வாங்க வேண்டியிருந்தது.
மன்னார் தொடர்பில் இலங்கை மின்சாரசபை ஒரு சாத்தியக்கூறு ஆய்வை நடத்தியது. ஆனால் அதானி அதற்குப் புதிதாக பணம் செலுத்த வேண்டியிருந்தது. மேலும், மன்னாருக்கான மின்சார உரிமம் மின்சாரசபையால் செயல்படுத்தப்பட்டது.
அதானி நிறுவனத்துக்கு பணத்தை வழங்கி அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருக்கலாம். மன்னார் திட்டத்தில் அவர்களுக்கு வழங்குவதற்காக இவை அனைத்தையும் நாங்கள் தயார் செய்திருந்தோம்.
அதிகாரிகள் வழங்கிய அறிக்கைகளின் அடிப்படையில், இந்த இரண்டு திட்டங்களையும், மற்றவற்றையும் நாங்கள் அங்கீகரித்தோம். ஒவ்வொன்றின் விலையும் வேறுபட்டது.
திட்டங்கள் நிறுத்தப்பட்டால், அதற்கான காரணங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறில்லை எனில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இதன் பொருள் அதானி இலங்கை மற்றும் இந்தியாவின் சட்டங்களை மீறிவிட்டது என்பதா? அதுதான் குற்றம் சாட்டப்படுகிறதா? இந்திய பிரதமர் வரவிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு திட்டங்களை இரத்து செய்வது பொறுத்தமானதல்ல.
எனவே இந்தியாவுக்கும் எமக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த வேண்டும். 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இந்திய – இலங்கை கூட்டுப் பிரகடனங்களின்படி நாம் செயல்பட வேண்டும்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுசக்தி திட்டத்தை செயல்படுத்துவதில் நாம் அரசாங்கத்தை ஆதரிக்கிறோம். நாம் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.