இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏழு முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் இன்று சனிக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளன.
பாதுகாப்பு, மின் கட்டமைப்புகள் இணைப்பு, திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துதல், இலங்கையை டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பு போன்ற துறைகளை உள்ளடக்கிய ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இவ்வாறு கைச்சாத்திடப்பட்டுள்ளன.
திருகோணமலையில் உள்ள எரிசக்தி மையத்துடன் தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐக்கிய அரபு எமிரேட்ஸை உள்ளடக்கிய முத்தரப்பு ஒப்பந்தமாகும்.
இலங்கைக்கு மூன்றுநாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டு நேற்று இரவு வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதை வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தந்ததுடன், அங்கும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பை தொடர்ந்து இருநாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுகள் ஆரம்பமாகின. பேச்சுகளை தொடர்ந்து ஏழு புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பாதுகாப்பு, மின் கட்டமைப்புகள் இணைப்பு, திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துதல் என்பன முக்கிய ஒப்பந்தங்களாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பாதுகாப்பு ஒப்பந்தம் இந்திய தரப்பால் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகும். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக இந்தியா தொடர்ந்து தமது கவலையை வெளிப்படுத்தி வந்தது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளிடமும் இந்தியா இந்த கவலையை வெளிப்படுத்தியிருந்ததுடன், கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதுடில்லிக்கு சென்றிருந்த தருணத்திலும் இதுகுறித்து கலந்துரையாடப்பட்டது. இந்த பின்புலத்திலேயே பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அத்துடன், இருநாடுகளுக்கும் இடையிலான மின்கட்டமைப்பு இணைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது. நில இணைப்பு தொடர்ந்து இந்தியா தொடர்ந்து இலங்கையிடம் கோரிக்கை முன்வைத்து வருகிறது. இதன் ஆரம்பகட்டமாக இந்த திட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டப் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், பிரதமர் மோடியும் கூட்டு ஊடக மாநாட்டை நடத்தினர். இதன்போது கருத்து வெளியிட்ட பிரதமர் மோடி,
மீனவர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் நாம் முன்னேற வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறோம்.
அந்த வகையில் இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் ‘இலங்கை மித்ர விபூஷண’ விருது எனக்கு வழங்கப்பட்டது பெருமைக்குரிய விடயம் ஆகும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தப் பெருமை எனக்கு மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த பெருமையாகும்.
இது இந்திய இலங்கை மக்களுக்கு இடையிலான வரலாற்று உறவுகள் மற்றும் ஆழமான நட்புக்கு கிடைத்த மரியாதையாகும். உண்மையான அண்டை நாடாகவும் நண்பராகவும் நமது கடமைகளை நிறைவேற்றியிருப்பது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விடயமாகும்.
2019 பயங்கரவாதத் தாக்குதல், கோவிட் தொற்றுநோய், சமீபத்திய பொருளாதார நெருக்கடி என ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் இலங்கை மக்களுடன் நாம் நின்றுள்ளோம்.
எமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையிலும், தொலைநோக்குப் பார்வையான ‘மகாசாகர்’ ஆகிய இரண்டிலும் இலங்கைக்கு சிறப்பு இடம் உண்டு என இந்தியப் பிரதமர் மோடி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் பல முக்கிய இந்திய-இலங்கை கூட்டுத் திட்டங்களை மெய்நிகர் வழியில் ஆரம்பித்து வைத்தனர்.
தொடங்கப்பட்ட திட்டங்களில் சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையம், தம்புள்ளையில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் விவசாயக் கிடங்கு மற்றும் இலங்கை முழுவதும் 5,000 மத நிறுவனங்களுக்கு சூரிய கூரை அமைப்புகளை வழங்குதல் ஆகியவை முக்கியமானவையாகும்.
நாளைய தினம் பிரதமர் மோடி அநுராதபுரம் ஸ்ரீ மகா போதியில் வழிபாடுகளில் ஈடுபட உள்ளதுடன், அதன் பின்னர் இந்தியா நோக்கி புறப்பட உள்ளார்.