பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பில் இலங்கை நீண்டகாலமாக கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
1979ஆம் ஆண்டு பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கில் இந்தச் சட்டம் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவால் கொண்டுவரப்பட்டது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட காலம் முதல் இன்றுவரை இந்தச் சட்டம் தொடர்பில் எதிர்மறையான கருத்துகளே உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நிலவுகிறது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒத்ததான சட்டங்கள் உலக நாடுகளில் உள்ள போதிலும் இலங்கையில் அந்தச்சட்டத்தால் மேற்கொள்ளப்படும் கைதுகள், விசாரணைகள் போல் ஏனைய நாடுகளில் மேற்கொள்ளப்படுவதி்ல்லை.
ஏனைய நாடுகளில் இவ்வாறானச் சட்டங்கள் சிவில் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஆனால், இலங்கையில் அதிகாரத்தில் உள்ளவர்கள் தமது தேவைக்காகவும் இந்தச்சட்டத்தை பயன்படுத்துகின்றனர்.
இலங்கையில் இந்தச் சட்டம் பொதுவாக தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்காக பயன்படுத்தப்படுவதாக நீண்டகால குற்றச்சாட்டு உள்ளதுடன், இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என தமிழ் மக்களே பல தசாப்தங்களாக போராடி வருகி்ன்றனர்.
சமகால அரசாங்கம் தமது ஆட்சியில் இந்தச் சட்டம் நீக்கப்படும் என உறுதியளித்திருந்தது. அதன் முதல்கட்ட பணிகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய ஒரு குழுவை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவி்த்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது குறித்தும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்தும் அரசாங்கம் விரிவான ஆலோசனை நடத்தும் என பதில் அளித்திருந்தார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது