அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு கடந்த பெப்ரவரி மாதம் இறுதியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியிருந்த நேர்காணலொன்றில் பட்டலந்த வதை முகாம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்று இலங்கை அரசியலை உலுக்கி எடுத்துள்ளது.
இந்த முகாம் ரணில் விக்ரமசிங்க வர்த்தக அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அவருக்கு பொறுப்பான வீட்டுத் தொகுதியொன்றிலேயே இயங்கியது. இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்திருந்ததுடன், ஆணைக்குழுவின் அறிக்கையையும் பெற்றிருந்தார்.
என்றாலும், இந்த ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. இந்த பதிலேயே ரணிலும் அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்திருந்தார்.
இதனால் பூதாகரமதான இந்த விவகாரம் இலங்கை அரசியலில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த அறிக்கையை அரசாங்கம் கடந்த மார்ச் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தி்ல் சமர்ப்பித்ததுடன், நேற்று 10ஆம் திகதி திகதிகளில் நாடாளுமன்ற விவாதமும் நடைபெற்றது.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலமொன்றை பெற இலஞ்சம் – ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலமொன்றை பதிவு செய்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு அரச வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்பு கணக்கை முதிர்ச்சியடைவதற்கு முன்னர் திரும்பப் பெற்றதன் மூலம் ஊழல் செய்ததாகக் கூறி, சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை இடம்பெறுகிறது.
இது தொடர்பாக, ரணில் விக்கிரமசிங்க நேற்று (10) கருத்து வௌியிட்டிருந்த நிலையில், அதன் ஊடாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் நடத்தப்படும் விசாரணை தொடர்பான தகவல்களை ரணில் விக்கிரமசிங்க அறிந்திருப்பதாகவும், சம்பந்தப்பட்ட விசாரணை தொடர்பான சம்பவத்தில் அவர் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் தலையிட்டுள்ளதாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, அவர் வௌியிட்ட கருத்தில் உள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களுடன் ஏப்ரல் 17 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
என்றாலும் பட்டலந்த விவகாரத்தில் ரணிலின் மயிரைகூட அரசாங்கத்தால் பிடுங்க முடியாதென சாமர சம்பத் நேற்றைய அவரது உரையில் கூறியிருந்தார். ரணில் விசாரணைக்கு அழைக்கப்பட்டதன் பின்புலம் பல வழிகளில் அவரை எதிர்காலத்தில் சிக்க வைக்கும் அரசாங்கத்தின முயற்சியாக இருக்கும் என ஐ.தே.கவின் சந்தேகிப்பதாக தெரியவருகிறது.