சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி திங்கட்கிழமை வியட்நாம் செல்கின்றார்.
‘உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த நுண்ணறிவு’ என்ற தொணிப்பொருளில் 2025 சர்வதேச வெசாக் தினம் இம்முறை கொண்டாடப்படுகின்றது. சுமார் 80 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்க உள்ளனர்.
ஹோ சி மின் நகரில் அமைந்துள்ள வியட்நாம் பௌத்த நிலையத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தினம் மற்றும் சர்வதேச அறிவியல் மாநாட்டில் சுமார் 1,000 சர்வதேச பிரதிநிதிகள் உட்பட 2,000 பேர் வரை பங்கேற்க உள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சில நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடனான சர்வதேச வெசாக் வைபவம் இலங்கையில் இடம்பெற்றபோது இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில் 2025 ஆம் ஆண்டு சர்வதேச வெசாக் தினத்தை மே மாதம் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் வியட்நாமில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துக்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். இதன் போதே டெல்லி விஜயத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சுமார் 30 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இந்த சந்திப்பில், இந்த தருணத்தில் இலங்கைக்கு எத்தகைய உதவியை இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கின்றீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வினவியுள்ளார்.
இதற்கு பதிலளித்த சஜித் பிரேமதாச, கொவிட் பெரும் தொற்றின் போதும், அதன் பின்னரான பொருளாதார நெருக்கடியின் போதும் இந்திய உதவி கிடைத்திருக்காவிடின் இலங்கையால் இந்தளவு சீக்கிரம் மீண்டிருக்க முடியாது. எனவே, எதிர்வரும் நாட்களிலும் பொருளாதாரத்தில் இருந்து மீள்வதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.
ஆகவே, இலங்கைக்கு ஆதரவாக இந்தியாவின் தொடர் ஒத்துழைப்பு அவசியம் என கோரிக்கை விடுத்தார். இதன் பின்னர் டெல்லிக்கு விஜயம் செய்யுமாறு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்தார். சந்திப்பில் பங்கேற்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் விஜயத்திற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மோடி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளா் என்பதும் குறிப்பிடத்தக்கது.