பிள்னையானிடம் உள்ள மர்மம் என்ன? 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

0
1
Article Top Ad

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாதன் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக பிள்ளையான் ஏப்ரல் 8 கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 72 மணிநேரம் தடுத்து வைக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்தப் பின்புலத்திலேயே தற்போது 90 நாட்கள் தடுத்துவைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பகுதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து பிள்ளையான் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் உள்ளிட்ட சில சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. என்றாலும் இந்த குற்றச்சாட்டுகளை பிள்ளையான் மறுத்திருந்தார்.

கொழும்பில் 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக கடமையாற்றிய பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவிந்திரநாத் காணாமல் போயிருந்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2004ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை அவர் கடமையாற்றியுள்ளார்.

இந்த காணாமல் போன சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு 2006ஆம் ஆண்டு முறைப்பாடொன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய பொலிஸார், 19 வருடங்களின் பின்னர் பிள்ளையானை கைது செய்துள்ளனர்.

பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவிந்திரநாத் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தின் பின்னணியில் பிள்ளையான் செயற்பட்டுள்ளதாக எழுந்துள்ள சந்தேகத்தை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து அரசாங்கத்துடன் இணைந்ததன் பின்னரான காலத்தில் பிள்ளையான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு தேவாலயத்தில் 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற கிறிஸ்மஸ் தின ஆராதனைகளின்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தக் கொலை சம்பவத்திற்கும், பிள்ளையானுக்கும் இடையில் நேரடித் தொடர்பு காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

சம்பவம் தொடர்பில் நடாத்தப்பட்ட விசாரணைகளில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜப்கஸவின் ஆட்சிக் காலத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் பிள்ளையான் செயற்பட்டு இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் பிள்ளையான் நிராகரித்துள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here