உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் 06 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சஹரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாதிகளால் 08 இடங்களில் 10 தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம், கட்டுவாபிட்டியில் உள்ள புனித செபஸ்தியன் தேவாலயம், மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயம், அதேபோன்று ஷங்ரி-லா, கிங்ஸ்பெரி மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன.
தெமட்டகொடை மற்றும் தெஹிவளையில் மேலும் இரண்டு தற்கொலை குண்டுவெடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த தாக்குதல்களால் 273 பேர் உயிரிழந்ததுடன் 500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்,
இந்நிலையில் அவர்களை நினைவுகூரும் வகையில் இன்று திங்கட்கிழமை (21) காலை 8.45 முதல் 8.47 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் குறித்து ஆறு ஆண்டுகளாக விசாரணைகள் இடம்பெற்று வரும் சூழலில் இன்னமும் பிரதான சூத்தரதாரி யாரென வெளிப்படுத்தப்படவில்லை.
கோட்டாபய மற்றும் ரணில் அரசாங்கங்களும் உண்மையான சூத்தரதாரிகளை வெளிப்படுத்துவதாக கூறிய போதிலும், குறித்த விசாரணைகள் மந்த கதியிலேயே இடம்பெற்றன.
சமகால அரசாங்கம் இதுகுறித்து விசாரணைகளை விரைவுப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. என்றாலும் இந்த அரசாங்கம் அமையப் பெற்று ஆறு மாதங்களை கடந்துள்ள சூழலில் இன்னமும் எந்தவொரு குற்றவாளியின் பெயரும் வெளிப்படுத்தப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.