இலங்கையில் அண்மைக்காலமாக நள்ளிரவு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
பிரபல பாதாள உலகத் தலைவர்கள் கொல்லப்பட்டுவரும் பின்புலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கடந்த காலத்தில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளராக செயல்பட்டுவந்த டான் பிரியசாத் என்பவர் உயிரிழந்துள்ளமையே இந்த அதிர்ச்சிக்கு காரணம்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் டான் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேற்று இரவு மீதொட்டமுல்லவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் வைத்து டான் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.
இதில் படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இரவு 9.10 மணியளவில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மீதொட்டமுல்லவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்றும், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நேற்று இரவு பொலிஸார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த டான் பிரியசாத் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று காலை உறுதிப்படுத்தியது.
டான் பிரியசாத்தின் தோள்பட்டையில் இரண்டு துப்பாக்கிச் சூடுகளும், மார்பின் மேலும் இரண்டு துப்பாக்கிச் சூடுகளும் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் மற்றொருவர் லேசான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கஞ்சிப்பானை இம்ரான் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்புலத்தில் இருக்கலாம் என சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.