இருளுக்குள் மரணிக்கும் ஜனநாயகம் – இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கண்டறியும் தேடல்

0
30
Article Top Ad

இந்த அழிவுகரமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதியைத் திட்டமிட்ட சூத்திரிதாரிகளுக்கு , அதனை செய்யும் வல்லமை இருக்குமாயின், தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மற்றுமொரு நெருக்கடியை ஏற்படுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு?

தற்கொலைக் குண்டுத்தாக்குதலையடுத்து கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தின் உட்பகுதி

அருண் ஆரோக்கியநாதர்

தம்பிஉங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லையே?”

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று காலை 9 மணியளவில் அந்த அழைப்பு வந்தது. சிரேஷ்ட ஊடகவியலாளர் உபேந்திர ஹேரத்தின் அந்த கவலை தோய்ந்த குரல், 6 வருடங்கள் கடந்த பின்னரும் கூடஇன்றும் என் நினைவில் எதிரொலிக்கின்றது. நான் பாதுகாப்பாக இருக்கின்றேன் என்பதை அறிந்த பின்னர் நிம்மதி பெருமூச்சு விட்ட அவர்அதன் பின்னர்  கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு இடம்பெற்ற செய்தியை பகிர்ந்துகொண்டார். அந்த சமூகத்துடன் நான் நெருங்கிய தொடர்பில் இருப்பதையும்ஞாயிறு ஆராதனையில் நான் அடிக்கடி கலந்துகொள்வேன் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அதனால்தான்பயந்து அவர் என்னைப் பற்றி விசாரித்துள்ளார்.

அன்றைய நாள்தெய்வாதீனமாக நான் வேறு தேவாலயத்திற்கு அதிகாலை ஆராதனைக்குச் சென்றிருந்தேன். அப்போது எனது பணியிடமாக காணப்பட்ட ஆதவன் தொலைக்காட்சிக்கு நான் விரைந்தபோதுநிலைமையின் தீவிரத்தை மெல்ல மெல்ல அறிந்துகொண்டேன். புனித அந்தோனியார் தேவாலயத்தில் மட்டுமன்றிமேலும் இரண்டு தேவாலயங்கள் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தோடுமூன்று சொகுசு ஹோட்டல்கள் மீதும் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அந்த கொடூரமான நாளின் முடிவில், 270இற்கும் மேற்பட்ட உயிர்கள் காவுகொள்ளப்பட்டதோடு, 500இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

என்னைப் பொறுத்தவரை கொச்சிக்கடை என்பது கொழும்பிலுள்ள ஒரு இடம் மாத்திரம் கிடையாது. யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய எனது குடும்பம் முதலில் அங்குதான் குடியேறியது. அங்குதான் புனித அந்தோணியார் இளைஞர் முன்னணி, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆண்கள் மகாவித்தியாலயம் ( தற்போது புனித அந்தோனியார் கல்லூரி)    எம்மையும் தங்களுடையவர்களாக அரவணைத்துக் கொண்டது. அந்தோனியார் தேவாலயத்தில்தான் செவ்வாய்க்கிழமைகளில் மாலை வேளையில்,  பிரார்த்தனைக்காக நாங்கள் ஒன்றுகூடிச் செபிப்போம். விடுமுறைத்தினங்களில் ஏழைகளுக்கு உணவளிப்பதற்காக நாம் வெளியில் சென்று உணவுப் பொதிகளை சேகரிப்போம். எமது வாழ்வின் ஒரு பகுதியாக இருந்த அந்த தேவாலயம்  துரதிஷ்டமான காலைப் பொழுதில்  குண்டுத்தாக்குதலால் சிதைக்கப்பட்டது. 

நான் புனித அந்தோனியார் ஆலயத்திற்குச் சென்றபோதுசீல் வைக்கப்பட்ட பகுதிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.  ஆனால் உள்ளூர் குடும்பங்களுடனான எனது தசாப்த கால நட்பின் பலனாகஅங்கிருந்த ஒரு குடும்பம் தேவாலய வளாகத்தை அவர்களுடைய வீட்டின் வெளிப்புறத்தில் இருந்து பார்ப்பதற்கு எம்மை அனுமதித்தது. நான் தனிப்பட்ட முறையில் அறிந்த பலர்அந்த குண்டுவெடிப்பில் இருந்து தப்பிக்கவில்லை என்பதை அங்கிருந்து அவதானித்து அறிந்துகொண்டேன். அந்த உடனடி வலிஆழமானதாகவும் அதிகமாகவும் என்னை ஆட்கொண்டது.

ABC தொலைக்காட்சியின் அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் அவர்களை கொச்சிக்கடை நியுனம் சதுக்கத்தில் உயிரிழந்த ஒருவரின் உறவினர் வீட்டிற்கு அழைத்துச்சென்றபோது

சொல்லப்படாத கதை

 

தொடர்ந்து வந்த நாட்கள் மற்றும் மாதங்களில்உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு இந்தக் கதையை நான் அறிக்கையிட்டேன். ABC செய்திச்சேவையின் Siobhan Heanueஇற்கு கொட்டாஞ்சேனை மற்றும் கட்டுவாப்பிட்டியவில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைக் காட்டி அவர்களுக்கு உதவினேன். அல் ஜசீராவின் 101 ஈஸ்ட் குழுவினருடன் பயணித்தேன். இந்த சம்பவத்தை விரிவாக முதலாவதாக அறிக்கையிட்ட சர்வதேச குழுக்களில் இதுவும் ஒன்றாகும். நிலைமையின் தீவிரத்தை நன்கு புரிந்து கொள்வதற்காக மாவனெல்லை மற்றும் மட்டக்களப்பில் குண்டுவெடிப்பு இடம்பெற்ற பகுதி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட ஏனைய பகுதிகளுக்கும் நாம் பயணித்தோம்.

அவர்களது ஆவணப்படமானது, என்ன நடந்தது என்பதைப் பற்றி மட்டுமன்றி. ஏன் நடந்தது என்பது பற்றியும் ஆராய்ந்தது. மட்டக்களப்புசியோன் தேவாலய குண்டுவெடிப்பில் தனது இரு குழந்தைகளையும் இழந்த தாய் ஒருவர்தனது மகனின் கிட்டார் வாசிக்கும் திறமை மற்றும் அவரது மகளின் அழகிய நடனம் பற்றி எம்மிடம் விபரித்தார். குண்டுவெடிப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஞாயிறு பாடசாலை வகுப்பில் தனது மகன் மற்றும் மகள் உள்ளிட்ட  குழந்தைகள் மகிழ்ச்சியுடன் செயற்பட்ட வீடியோவை அவர் எமக்குக்  காட்டினார்.  என் பிள்ளைகள்தான் எனக்கு உலகம்”, எனக் கூறிய அவரது கைகள் நடுங்கின. ஆழ்ந்த சோகத்தின் இத்தகைய தருணங்கள் ஒரு பெரிய மற்றும் மிகவும் மோசமான கதையின் பின்னணியாக மாறியது.

தாக்குதல் எச்சரிக்கைகள் கிடைக்கப்பெற்ற போதும் அவற்றை புறக்கணித்தமைவிசித்திரமான பாதுகாப்புத் தோல்விகள் மற்றும் உண்மையைக் வெளிப்படுத்துவதற்கு பதிலாக இருட்டடிப்பு செய்ய வடிவமைக்கப்பட்ட விசாரணைகள் என்பன வெளிப்படையாகியுள்ளன துரதிஷ்டமான அந்த நாளின் காலை ஆராதனையை நடத்தியிருந்த அருட்தந்தை ஜோய் மரியரத்தினம் என்னிடம் இவ்வாறு குறிப்பிட்டார். யாரோ ஒருவரின் அரசியல் அபிலாஷைகளுக்காக நாம் பலிக்கடா ஆக்கப்பட்டதைப் போல தோன்றுகின்றது” என்றார்.

இந்தத் தாக்குதல்கள் குறித்து உளவுத்துறையிலிருந்து பல எச்சரிக்கைகள் கிடைத்துள்ளன. தேவாலயங்கள் குறிவைக்கப்படுவது மற்றும் அடிப்படைவாத போதகரான சஹ்ரான் ஹாஷிம் பற்றிய தெளிவான எச்சரிக்கைகள் இதில் அடங்கும். எனினும் அவை திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்த தோல்விகளை உறுதிசெய்த உயர் நீதிமன்றம்இதற்கான இழப்பீட்டினை செலுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உத்தரவிட்டது. ஆனால்இந்த பாதுகாப்பு எச்சரிக்கைகள் ஏன் புறக்கணிக்கப்பட்டனஇந்த சோகத்தினால் பயனடைந்தவர் யார்போன்ற கேள்விகள் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன.

நீர்கொழும்பு கட்டுவாப்பிடிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் அல்ஜசீரா குழுவினருடன்

ஒரு திட்டமிட்ட வன்முறை

இலங்கை ஊடகவியலாளர்கள் மத்தியில் இவ்வாறான பேச்சுக்கள் பரவும் முதலாவது சந்தர்ப்பம் இதுவல்ல. 2008ஆம் ஆண்டு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொல்லப்பட்ட போதும்2006இல் கெபித்திகொல்லேவ தாக்குதல் நடந்த போதும் இதே மாதிரியான உரையாடல்களைத்தான் என் சகாக்கள் மத்தியில் அவதானித்தேன். இந்தத் தாக்குதல்கள், அதிகாரத்தில் இருப்பவர்களால் திட்டமிடப்பட்டவை என்பது அவர்களது கருத்தாக அமைந்தது. ஆனால்சிங்களப் பெரும்பான்மையினரின் பொது எதிரியாக இன்னும் விடுதலைப் புலிகளே உள்ள நிலையில்அனைத்துப் பழிகளும் அவர்கள் மீது எளிதில் சுமத்தப்பட்டன. தீவிர விசாரணைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் வித்தியாசமானவை. கொடிய உள்நாட்டுப் யுத்தம் முடிவுற்று சுமார் ஒரு தசாப்த காலத்தின் பின்னர்விடுதலைப் புலிகள் இயக்கம் செயலிழந்த நிலையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த நேரத்தில்இல்லாமல் போன எதிரியின் மீது பழிசுமந்த குற்றவாளிகளால் முடியவில்லை. ஆனால்நிச்சயமாக இதனைச் செய்ய சிலர் முயற்சித்தனர். தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்அதே தவறுகளை மீண்டும் நடக்க அனுமதிக்கக் கூடாது.

எல்லாவற்றிற்கும் மேலாகஇதுபோன்ற கொடிய தாக்குதல்களை நடத்துவதற்கு நிபுணத்துவம் பெற்றவர்கள்தமது அரசியல் இலக்குகளை நிறைவேற்றிக்கொள்ள மற்றுமொரு நெருக்கடியை ஏற்படுத்த மாட்டார்கள் என்பதை உறுதியாக நம்புவது எப்படிஉண்மையைக் கண்டறிந்து அதற்குக் காரணமானவர்களைத் தண்டிப்பது என்பது கடந்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது மட்டுமன்றிஎதிர்கால துயரங்களைத் தடுப்பதும் ஆகும்.

கட்டுவாப்பிடிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதலின் போது உயிரிழந்தவர்களுக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட நல்லடக்கஸ்தலம்

இருண்ட உண்மை வெளிப்படுகின்றது

இலங்கை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியவாறுமீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான ஒரு வழியாக திட்டமிடப்பட்டதே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் என அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

“52 நாட்கள் ஆட்சிக்கவிழ்ப்பு சதிநீதிமன்றில் தோல்வியில் முடிவுற்றது. அப்போதுதான் மாவனெல்லையில் புத்தர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதன் மூலம்அடுத்த திட்டம் (பிளான் பி) விரைவாக அரங்கேறியது. ஷானி அபேசேகர மற்றும் அந்த உத்தரவை நிறைவேற்றிய அதிகாரிகளின் பதவி நீக்கத்தை பார்க்கும்போதுஇந்த சதியை அம்பலப்படுத்துவதை தடுக்கவே கோட்டாபய ராஜபக்ஷ விரும்பினார் என்பது தெளிவாகின்றது”.

கடந்த 2023ஆம் ஆண்டு சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான ஆவணப்படமான “Truth Behind the Easter Bombings” (உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னாலுள்ள உண்மைகள்)அதிர்ச்சியூட்டும் ஆதாரங்களை வெளிப்படுத்தியது. இந்தத் தாக்குதல்கள் வெறும் பயங்கரவாதச் செயல்கள் அல்ல என்றும்ராஜபக்ஷ குடும்பத்தை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக திட்டமிடப்பட்ட ஒரு சோகமான நிகழ்வு என்றும் அந்த ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டது.

வெளிப்படைத்தன்மை மற்றும் நீதிக்குதற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதிப்பாட்டினை வழங்கியுள்ள போதும்அதன் நகர்வுகள் மெதுவாகவே உள்ளன. 2023ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த சந்தர்ப்பத்தில, Daily FT செய்தித் தளமானது இவ்வாறு எச்சரித்திருந்தது. விசாரணைகள் மற்றும் குற்றவாளிகள் மீதான வழக்கு விசாரணைகளில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், தற்போதைய விக்ரமசிங்க ஆட்சியும் இந்த மூடிமறைப்பில் ஒரு பகுதியாக உள்ளது என கருதுவதைத் தவிர வேறு வழியில்லை”. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில்அவர்களுக்கும் இந்த விமர்சனம் பொருந்தும்.

அதிக அதிகாரம், ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரைவில் புரிந்து கொள்ள வேண்டும். இராணுவம் மற்றும் பௌத்த மதகுருமார்களின் ஆதரவுடன் கோட்டாபய ராஜபக்ஷ பலமான ஆதரவுடன் பதவிக்கு வந்தார் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். அவ்வாறான ஆதரவு இருந்தபோதிலும்கூடஅவருக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதுஅவரது ஜனாதிபதி பதவியும் 970 நாட்கள் மட்டுமே நீடித்தது. 

பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை நிறைந்த உலகில்எந்த அரசாங்கமும் அதன் முழுமையான ஆட்சிக்காலத்தை சாதாரணமாக நிறைவு செய்யலாம் என கருத முடியாது. நிம்மதியாக இருப்பதற்கான தருணம் இதுவல்ல. உங்கள் வாக்குறுதிகளை விரைவாகச் செயற்படுத்துங்கள்ஏனென்றால் மற்றொரு வாய்ப்பு கிடைக்காது.

நீங்கள் வித்தியாசமானவர் என்றும்அதிகார ஆசையால் உந்தப்படாமல்பாரம்பரிய அரசியல் விளையாட்டுகளில் சிக்காமல்துணிச்சலானகொள்கை ரீதியான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்றும் நம்பிமக்கள் உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளனர். அவற்றைச் சரியாக நிரூபியுங்கள். எப்போதாவது நடக்கும் என காத்திருக்காமல் இப்போதே அதனைச் செய்யுங்கள்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் புதுப்பிக்கப்பட்ட விசாரணை குறித்துஉண்மை இயக்கத்தின் முக்கிய நபராகவுள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைஎச்சரிக்கையுடனான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால்வார்த்தைகளை விட செயற்பாடுகளுக்கே வலிமை அதிகம். ஒவ்வொரு உயிர்த்த ஞாயிறு தினமும் கடந்து செல்கையில்நம்பிக்கை மீதான ஒளி குறைவடைந்து செல்கின்றது.

உண்மையை வெளிக்கொணர்வதும்குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைப்பதும் இங்கு மிகவும் முக்கியமானது. காரணம்அவர்களது இலக்கு அழிவை ஏற்படுத்தவது மாத்திரமன்றிசமூகங்களுக்கு இடையே வன்முறையை ஏற்படுத்துவதும் ஆகும். அந்த பதட்டமான நாட்களில் கத்தோலிக்க திருச்சபை புத்திசாலித்தனமாகவும் நிதானமாகவும் செயற்படாமல் இருந்திருந்தால், 1983ஆம் ஆண்டை விடவும் மோசமான கலவரத்தில் இலங்கை சிக்கியிருக்கும்.

புள்ளிவிபரங்களுக்கு அப்பாற்பட்ட மனித இழப்பு

பல இலங்கையர்களுக்குகுறிப்பாக கத்தோலிக்க சமூகத்தினருக்குஉயிர்த்த ஞாயிறு இனி புதிய தொடக்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தப் போவதில்லை. ஆனால் தண்டனையின்மை மற்றும் நிறுவனங்களின் காட்டிக்கொடுப்பை அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் நினைவூட்டும். இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான ஒவ்வொரு முயற்சியும் இன்னும் நீடித்திருக்கும் தீர்க்கப்படாத கேள்விகளால் பலவீனமடைகிறது. வலிமிகுந்த நினைவுகளுடனும் சிதைந்த வாக்குறுதிகளுடனும் பாதிக்கப்பட்டவர்கள் காத்திருக்கின்ற அதேவேளைஅதற்கு காரணமான குற்றவாளிகளோ சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

இந்தத் தாக்குதல்கள்மக்களுக்கு தீங்கு விளைவித்ததை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதாவதுமூன்று தசாப்தங்களுக்கு மேற்பட்ட உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த ஒரு தேசத்தின் ஒற்றுமையை இந்த தாக்குதல்கள் சிதைத்துள்ளன. ஒரு காலத்தில் கொட்டாஞ்சேனை புனித அந்தோணியார் தேவாலயத்திற்கு கத்தோலிக்கர்களுடன்இந்துக்கள்பௌத்தர்கள் மற்றும் முஸ்லிம்களும் சென்ற நிலையில்தற்போது நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இலங்கையின் பன்முக கலாச்சார உணர்வை வெளிப்படுத்திய சமூகம்இப்போது இலக்குவைக்கப்பட்ட வன்முறையின் வடுக்களை சுமந்து காணப்படுகின்றது.

உலகளாவிய தார்மீக பொறுப்பிற்கு அழைப்பு

இது வெறுமனே இங்கையின் துயரம் மாத்திரமன்றிநீதிக்கான மனிதகுலத்தின் அர்ப்பணிப்புக்கான சோதனையும் ஆகும். ஜனநாயக கட்டமைப்புகள் தோல்வியடையும் போதும்உண்மை சமரசம் செய்யப்படும்போதும்மனித உயிர்களை விட அரசியல் அபிலாஷைகள் அதிகமாகும் போதும்நாம் அனைவரும் பாதிக்கப்படுகிறோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இலங்கையின் கத்தோலிக்கர்களுக்கு எதிரான குற்றம் மட்டுமல்லஅது மனித கண்ணியம் மற்றும் பொறுப்புக்கூறலின் முக்கிய விழுமியங்களின் மீதான தாக்குதலும் ஆகும்.

•     சர்வதேச சமூகத்திற்கு: உங்கள் மௌனமானதுதண்டனையிலிருந்து விடுபட அனுமதிக்கிறது.

•     உலகெங்கிலுமுள்ள ஊடகவியலாளர்களுக்கு: உங்கள் நாட்டு மக்களின் குரல் மௌனிக்கப்படும்போது அதுகுறித்து நீங்கள் அவதானம் செலுத்துவது மிக முக்கியமானது.

•     அனைத்து மக்களுக்கும் : ஒரு நாட்டின் தார்மீக விழுமியங்கள் தாக்கப்படும்போது உங்கள் ஒற்றுமை முக்கியமானது.

நான் இந்த ஆக்கத்தை எழுதும் போதுதனது குழந்தையின் இறுதி தருணங்களை காணொளி வடிவில் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த மட்டக்களப்பு தாயை நினைத்துப் பார்க்கின்றேன். அல் ஜசீரா தயாரித்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள நிரஞ்சன் லக்ஷ்மன்தேவாலயத்தில் குழுப்பாடல் இசைத்துக்கொண்டிருந்த குழுவினர் இறப்பதை பார்க்கும் பயங்கரத்தை விபரிப்பதை நான் செவிமடுக்கின்றேன். உண்மையை கண்டறிய போராடிக்கொண்டேஅதிர்ச்சியடைந்த சமூகத்திற்கு தொடர்ந்து சேவை செய்யும் அருட்தந்தை ஜோயை நான் காண்கின்றேன்.

அவர்களுக்கும் நம் அனைவருக்கும்உயிர்த்த ஞாயிறு மீண்டும் நம்பிக்கையை அர்த்தப்படுத்த வேண்டும். சம்பவத்தை மறப்பதன் மூலமாக அன்றிதைரியமாக நீதியைத் தேடுவதன் மூலம் இது அமைய வேண்டும். ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டபோதும்அந்தக் குண்டுகளின் புகை இன்னும் இலங்கையின் ஆன்மாவை பாதிக்கின்றது. உண்மையை கண்டறிவதால் மட்டுமே அதனை நீக்க முடியும். நீதியை பெற்றுக்கொடுப்பதன் மூலமாக மாத்திரமே இந்தக் காயங்களை ஆற்ற முடியும். இழந்த 270 உயிர்களுக்கு மரியாதை செலுத்தவும்அவர்களின் மரணம் அர்த்தமுள்ள ஒன்றுக்கு வழிவகுக்கும் என்பதை உறுதிப்படுத்தவும் நாம் ஒன்றுபட வேண்டும்.

மௌனம் மிக நீண்ட தூரம் பயணித்துவிட்டது. ஆகவேஉலகம் இதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இதுவாகும். அதேபோன்றுஇறுதியில் இலங்கை உண்மையை அறிந்துகொள்ள வேண்டிய தருணமும் இதுவாகும்.

இந்தக்கட்டுரை முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பின்னர் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதாகும். ஆங்கிலத்தில் கட்டுரையை வாசிக்க விருப்புகின்றவர்கள் இதனைக் கிளிக் செய்யவும்:     
இந்த மூல ஆங்கிலக் கட்டுரையை எழுதிய அருண் ஆரோக்கியநாதன் ஆகிய நான்  எனது சொந்தச் சிந்தனையை நவீன செயற்கைநுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவிகொண்டு மெருகேற்றி எழுதியிருந்தேன். என்னைப்பற்றி மேலும் அறிந்துகொள்ளவிரும்புகின்றவர்கள் எனது டுவிட்டர் பக்கம் @aroarun மற்றும் Linkedin தளங்களைப் பார்வையிடவும் .  
காத்தான் குடியில் அல்ஜசீரா ஊடக குழுவுடன்
ஊடகவியலாளர் Lauren Frayer அவர்களை கட்டுவாப்பிடிய தேவாலத்திற்கு அழைத்துச் சென்றபோது அவர் தாக்குதலை நடத்தியவர் நின்றுகொண்டிருந்த இடத்தைக் காண்பிக்கின்றார்.
கட்டுவாப்பிடிய சந்தியில் ABC ஊடக்குழுவினர் நேரலையின் போது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here